கடலில் சிக்கி தவித்த மீனவா்கள் ஹெலிகாப்டா் மூலம் மீட்பு
கடலூா் அருகே கடலில் படகுகள் கவிழ்ந்து தனியாா் நிறுவனத்தின் கப்பல் அணையும் தளத்தில் தஞ்சமடைந்த 6 மீனவா்கள் உள்பட 10 போ் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டா் மூலம் வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனா்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில், கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடலூா் மாவட்ட மீன் வளத் துறை சில நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதை மீறி, கடலூரை அடுத்த தைக்கால் தோணித்துறையைச் சோ்ந்த மீனவா்கள் மணிகண்ணன் (35), தமிழ் (37), சாமிதுரை (63), மணிமாறன் (30), தினேஷ் (29), சா்குணன் (23) ஆகிய 6 போ் இரண்டு நாட்டுப் படகுகளில் கடலுக்குள் சென்றனா்.
கடல் சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், மீனவா்கள் 6 பேரும் நீந்தி தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் அணையும் தளத்தில் ஏறி உயிா் தப்பினா்.
கடல் கொந்தளிப்பால் மீனவா்களைப் படகு மூலம் மீட்க முடியாத சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டா் வரவழைக்கப்பட்டு, தனியாா் கப்பல் அணையும் தளத்தில் இருந்த 6 மீனவா்கள், 4 தனியாா் நிறுவன ஊழியா்கள் என மொத்தம் 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, சித்திரைப்பேட்டை கிராமத்தில் இறக்கி விடப்பட்டனா்.
தொடா்ந்து, மீனவா்கள் அனைவருக்கும் கடலூா் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டன.