சிக்கந்தர் விமர்சனம்: ராஜா கதையல்ல, ராஜா காலத்து கதை; எல்லா சீனையும் சாமிக்கு வி...
"கடலுக்குள் போராட்டம், பதறிய குதிரை; காப்பாற்றிய மக்கள்" - குதிரையேற்ற வீராங்கனைச் சுகன்யா பேட்டி
ஒவ்வொரு வருடமும் அகில இந்திய அளவில் குதிரைப்படை காவல் துறையினருக்கான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் நடைபெறும்.
அந்த வகையில் சமீபத்தில் 43-வது அகில இந்திய காவல் குதிரையேற்ற போட்டிகள் ஹரியானா மாநிலம் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை அடிப்படை பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்றன.
இதில் 12 வீரர்கள் கலந்து கொண்டு ஒரு தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.
தமிழகத்தின் சார்பாகப் பெண் குதிரையேற்ற வீராங்கனையாகக் கலந்து கொண்ட சுகன்யா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுகன்யாவிடம் பேசினோம். "மகிழ்ச்சியா இருக்கு. காவலராகப் பதக்கம் வாங்கியிருக்கேன்னு சொல்றத விட குதிரையேற்ற போட்டிகளில்ல ஒரு பெண்ணா ஜெயிச்சது இன்னும் சந்தோசம்.
தமிழக குதிரைப்படையில இப்போ 2 பெண்கள் இருக்கோம். குதிரையேற்ற போட்டிகளுக்குப் போகும் ஒரே பொண்ணு நான். குதிரைய ஹேண்டில் பண்ண கொஞ்சம் பக்குவமும், நிறைய துணிச்சலும் இருக்கணும். இது ரெண்டையும் அனுபவம் எனக்குக் கத்துக்கொடுத்துருக்கு.
இவரு என் ஸ்போர்ட்ஸ் பார்ட்னர் 'ஸ்டார் சும்ரிமோ' நான் செல்லமா 'ரேமோ'னு கூப்பிடுவேன். 'ரேமோ'னு கூப்பிட்டா அவன் காதுகள் நான் கூப்பிடுற திசைய நோக்கி தன்னால திரும்பும்.
டிரெஸ்ஸேஜ் (dressage sport), ஹேக் போட்டிகளில் நான் பரிசுகள் வாங்கியிருக்கேன். இது ரெண்டுமே குதிரைக்கும் வீரருக்கும் இடையே உறவைச் சோதிப்பது.
நான் கட்டளை கொடுக்க கொடுக்க தலைவன் மின்னல் வேகத்துல ரியாக்ட் பண்ணி பரிசு வாங்கிருவான்.

ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் இவன் கூட தான் இருப்பேன். நான் லீவ் எடுத்துட்டு போயிட்டா நான் வந்ததும், அவன் முகத்தால் என்னைக் கட்டிப்பிடிச்சுப்பான்.
ரொம்ப நேரம் விடவே மாட்டான். இவனுக்காகவே நான் லீவ் எடுக்குறது ரொம்ப குறைவு. அதே நேரம் நான் திட்டுனா சாருக்கு கோபமும் வந்துரும். மண்டைய ஆட்டி ரியாக்ட் பண்ணுவாரு. அடங்காமா சேட்ட பண்ணுவான்.
நான் சொல்ற கட்டளைக்குச் சரியா ரியாக்ட் பண்ணா அவனுக்கு கேரட் கொடுப்பேன். கேரட் ரொம்ப பிடிக்கும்.
கேரட் சாப்பிடுற நேரம் அவன தொல்ல பண்ணா பிடிக்காது. யாராக இருந்தாலும் திமிரிருவான். அவன பொறுத்த வரைக்கும் அவன் பண்ற ஒரு வேலைக்கு கேரட் கிடைச்சா அது சரி.
மத்தபடி அவன் பண்ற விஷயம் சரியா, தப்பானு மனுஷங்க மாதிரி சிந்திக்க தெரியாது. அதனால புதுசா வர்ற யார்கிட்டயும் இவன ஹேண்டில் பண்ண விட மாட்டேன்.
போட்டியில என்னோட உழைப்பு 50 சதவிகிதம்னா, இவனோட உழைப்பு 50 சதவிகிதம். ஆனா, இவன் இல்லாம இந்த வெற்றி சாத்தியம் இல்ல" என்றவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

"எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர். சின்ன வயசுல இருந்து ஸ்போர்ட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். படிச்சு முடிச்சதும் போலீஸ் வேலைக்கான பரீட்சை எழுதி பாஸ் பண்ணினேன்.
வேலை கிடைச்சுது. டிரெய்னிங் முடிஞ்சதும், குதிரைப்படையில சேர விருப்பம் இருக்குறவங்க சேரலாம்னு சொன்னாங்க. வீட்ல அதெல்லாம் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா, நான் வீட்டுக்குத் தெரியாம வேலையில சேர்ந்துட்டேன்.
ஆறுமாசம் கழிச்சுதான் வீட்டுக்கே சொன்னேன். பயிற்சிலயும், ரோந்துலயும் பலமுறை குதிரையில இருந்து கீழ விழுந்து அடிபட்டிருக்கு.
ஒருமுறை நான் சவாரி பண்ண குதிரை என்னைக் கடலுக்குள்ள தள்ளிவிட்டுருச்சு. அலை இழுத்துட்டுப் போக அக்கம்பக்கம் இருந்தவங்க வந்து காப்பாத்துனாங்க.
இப்படி எத்தனையோ அனுபவங்கள்... ஒவ்வொரு முறை விழும்போதும், அதே வேகத்துல திரும்பி குதிரை ஏறணும்னு ஏறுவேன். என் வேலைனா எனக்கு அவ்வளவு இஷ்டம்.
என்னைய என் குதிரை தள்ளி. நான் தண்ணில திணறி மீண்டு வந்தேன். ஆனா, அதுக்காக என் குதிரை ரொம்பவே பதறுச்சு. குதிரைக்கும் எனக்குமான உறவு என்னைக்கும் அழகானது. ஆழமானது.
மனுச்கங்கள விட வாயில்லா ஜீவன்க காட்டுற அன்பு பரிசுத்தமானது. வேலைக்குச் சேர்ந்த முதல் ஒன்பது வருஷங்கள் ரோந்துப் பணிகள்தான் பண்ணிட்டு இருந்தேன்.
அப்புறம் எங்க மேலதிகாரி மூலமாதான் குதிரையேற்ற விளையாட்டுக் குழு பற்றி தெரிய வந்துச்சு. அதுக்காக என்னைத் தயார்படுத்திக்க ஆரம்பிச்சேன்.

43 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் நடக்கும் குதிரையேற்ற போட்டிகள் நடக்குது. 38வது போட்டியில்தான் தமிழகத்துல இருந்து கலந்துக்க ஆரம்பிச்சோம்.
முதல் முதலா போட்டிக்குப் போகும் போது பயிற்சி செய்ய போதுமான சாதனங்கள் இல்ல. கட்டைகள் வெச்சுதான் பயிற்சி எடுத்துக்கிட்டோம்.
ஆனா முதல் முறையே வெவ்வேறு பிரிவுகளில் தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் தட்டி வந்தோம்.
அன்றிருந்து இன்று வரை அரசாங்கத்துல இருந்தும், எங்கள் துறையில இருந்து எங்களுக்கு முழு சப்போர்ட் கிடைக்குது.
இந்த வருசத்துக்கான போட்டிகளுக்காகக் கடந்த ஆறு மாசமா எங்களைத் தயார் பண்ணோம். மார்ச் எட்டாம் தேதி சென்னையில இருந்து கிளம்புனோம்.
குதிரைகள் அதுக்கான வாகனத்துல 4 நாள் பயணம் செஞ்சு வந்துச்சு. குதிரைகள் பாவம்தான்... நாலு நாள் நின்னே வந்ததால களைப்பாகிருச்சு. அப்புறம் 3 நாள் ஓய்வு கொடுத்து 15ம் தேதி போட்டிகளில் கலந்துக்கிட்டோம்.
பத்து நாள் போட்டி முடிவுல 5 பதக்கங்களைத் தமிழக அணி வாங்கியிருந்தோம். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ. அருண் சார் எங்க டீமை அழைச்சு பாராட்டி பரிசுகள் கொடுத்தாங்க.

அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு இன்னும் உற்சாகமாகத் தயார் பண்ணிக்கணும். ஒரே ஒரு ஆசை தான்.
இப்போ குதிரையேற்ற போட்டிகளுக்கான அணியில நான் ஒரு பெண்தான் இருக்கேன். அடுத்ததுத்து பெண்கள் வரணும். நம்மால் எதுவும் முடியும்" என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடை கொடுக்கிறார் சுகன்யா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs