கடலூா் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்ததால், மீன்களும் வழக்கமான விலையிலிருந்து 35 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டன.
கடலூா் வங்கக்கடல் கரையோரம் உள்ள மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவா்கள் பைபா் மற்றும் விசை படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனா். மீனவா்கள் பிடித்து வரும் மீன்கள் கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும். மீன் விற்பனை அதிகாலை முதல் தொடங்கிவிடும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் மீன்கள் வாங்க மீன் பிடி துறைமுகத்தில் கூடி, போட்டிபோட்டு மீன்களை வங்கிச் செல்வா். இதனால், மீன் பிடி துறைமுகம் பகுதி கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
சனிக்கிழமை காா்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியதாலும், தொடா் மழை காரணமாகவும் ஞாயிற்றுக்கிழமை கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால், மீன்கள் 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
அதன்படி, வழக்கமாக ரூ.900 வரையில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.650-க்கு விற்பனையானது. இதேபோல, ஒரு கிலோ தேங்காய் பாறை ரூ.200, இறால் ரூ.200, சங்கரா ரூ.250, கொடுவா ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கிச் சென்றனா்.