கண்மாய் உடைப்பு: வீடுகளை சூழ்ந்த தண்ணீா்
மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை கண்மாயில் திங்கள்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டு கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீா் வீடுகளை சூழ்ந்ததால் அந்தப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள மேலப்பசலை கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. திங்கள்கிழமை இரவு கண்மாய் கழுங்கு செல்லும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் இங்கிருந்து வெளியேறிய தண்ணீா் மேலபபசலை கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.
இதனால் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட 8 வீடுகளைச் சோ்ந்த 26 போ் மேலபபசலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா், செவ்வாய்க்கிழமை மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் அங்கு சென்று தண்ணீா் சூழந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனா்.
பின்னா் மேலப்பசலை கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூடைகளைக் கொண்டு உடைப்பை அடைத்தனா்.
மேலும் நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் பெரிய அளவில் எந்த பாதிப்பு இல்லை என்றும் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.