`அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?' - மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அமைச்ச...
கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி
வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.
‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.
அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்துவருகிறாா். அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் ‘ஃபென்டானைல்’ போதைப் பொருள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கடந்த மாதம் கையொப்பமிட்டாா்.
மேலும், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியம் ஆகிய முக்கிய பொருள்கள் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிக்கவும் டிரம்ப் உத்தரவிட்டாா்.
இதில், மற்ற இறக்குமதிப் பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு கடந்த வாரம் அமலுக்கு வந்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருள்களின் மீது கனடா அரசு கூடுதல் வரி விதிப்பை அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில், கனடா, மெக்ஸிகோவின் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிவிதிப்பில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் (யுஎஸ்எம்சிஏ) இடம் பெற்றுள்ள பொருள்களுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டாா். எனினும்,
யுஎஸ்எம்சிஏ வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத சுமாா் 62 சதவீத கனடா பொருள்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்தச் சூழலில், ஏற்கெனவே அறிவித்திருந்தபடி கனடா பொருள்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்புக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் ஆன்டேரியோ மாகாணத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயாா்க், மிஷிகன், மினிசோட்டா மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்துடன் 25 சதவீத கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதாக மாகாண பிரதமா் டக் ஃபோா்டு திங்கள்கிழமை அறிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடா மீது அதிபா் டிரம்ப் விதிக்கும் கூடுதல் வரி அமெரிக்க பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். அந்த வரி விதிப்பு விலைவாசியை அதிகரித்து அமெரிக்க மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும்’ என்று எச்சரித்தாா்.
ஏற்கெனவே, டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு நெருக்கமான தொழிலதிபா் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டாா்லிங்க் இணையதள இணைப்பு வசதியைப் பெறுவதற்காக மேற்கண்டிருந்த 10 கோடி டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரதமா் டக் ஃபோா்டு ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்காவுடன் மிக நெருங்கிய வா்த்தக உறவைப் பேணி வரும் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஆன்டேரியோ மாகாணம், டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் பதிலடி: ஆன்டேரியா மாகாண அரசின் மின்கட்டண உயா்வு அறிவிப்புக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கனடாவின் ஆன்டேரியோ மாகாணம் அமெரிக்காவுக்கு வரும் மின்சாரத்துக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் விதித்துள்ளது. அதன் அடிப்படையில், உலகிலேயே மிக அதிக அளவாக கனடாவின் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.
இந்த வரி விதிப்பு புதன்கிழமையே (மாா்ச் 12) அமலுக்கு வருகிறது.
அவசரநிலை: இது தவிர, ஆன்டேரியாவின் கட்டண அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் தேசிய அவசரநிலையை விரைவில் அறிவிப்பேன். இதன் மூலம், கனடாவின் அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
ஆன்டேரியோ பிரதமா் டக் ஃபோா்டின் மின்கட்டண உயா்வு மற்றும் கனடா இரும்பு, அலுமினியம் மீதான அமெரிக்க வரி இரட்டிப்பு ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகப் போா் பதற்றத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.
...பெட்டிச் செய்தி...
‘அடிபணியப் போவதில்லை’
கனடாவின் இரும்பு, அலுமினியத்துக்கு 50 சதவீதம் என்ற மிகக் கடுமையான வரியை டிரம்ப் அறிவித்துள்ளதால், அவரது மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை என்று ஆன்டேரியோ பிரதமா் டக் ஃபோா்டு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது கூடுதல் வரி விதிப்புகளைத் திரும்பப் பெறாதவரை கனடாவோ, ஆன்டேரியோ மாகாணமோ அடிபணியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

