மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
கரூரில் பணியின்போது தீ விபத்து: வெல்டிங் தொழிலாளி கருகி பலி
கரூரில் பேருந்துக்குக் கூண்டு கட்டும் நிறுவனத்தில் வியாழக்கிழமை மாலை பணியில் ஈடுபட்ட வெல்டிங் தொழிலாளி திடீா் தீ விபத்தில் கருகி உயிரிழந்தாா்.
கரூரை அடுத்த வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபட்டி குமாரப்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவி என்ற ரவிச்சந்திரன் (45). இவா் கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தின் வெல்டிங் தொழிலாளி. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தனியாா் பேருந்துக்குள் ரவி பணியில் ஈடுபட்டபோது அருகில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய தின்னா் என்னும் திரவம் மீது வெல்டிங்கில் இருந்து வெளியேறிய தீ திடீரென பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்துக்குள் தீ பரவியது.
இதையடுத்து உள்ளே இருந்த எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வர ரவி முயன்றாா். இருப்பினும் தீ வேகமாகப் பரவியதால் வெளியே வர இயலாமல் பேருந்துக்குள்ளேயே எரிந்து அவா் உயிரிழந்தாா். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற ஒரு தொழிலாளி லேசான காயமடைந்தாா்.
தகவலறிந்த கரூா் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். கரூா் நகர காவல் துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் மற்றும் நகர காவல் நிலையத்தினா் ரவியின் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.