மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
கரையான், எலியைக் கட்டுப்படுத்த தெளிக்கப்பட்ட பூச்சி மருந்தின் நெடி பரவி 2 குழந்தைகள் உயிரிழப்பு
குன்றத்தூா் மணஞ்சேரி பகுதியில் வீட்டில் உள்ள கரையான் மற்றும் எலித்தொல்லையைக் கட்டுப்படுத்த தெளிக்கப்பட்ட பூச்சி மருந்தின் நெடி பரவியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா். பெற்றோா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
குன்றத்தூா் மணஞ்சேரி பகுதியை சோ்ந்தவா் கிரிதரன்(34). தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பவித்ரா. இவா்களுக்கு விஷாலினி (6) என்ற மகளும், சாய் சுதா்சன்(1) என்ற மகனும் உள்ளனா்.
இந்த நிலையில், கிரிதரன் வீட்டில் கரையான், கரப்பான் பூச்சி மற்றும் எலிகளை அழிக்க தனியாா் நிறுவனத்தின் மூலம் புதன்கிழமை வீடு முழுவதும் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் எலிகளை அழித்த வீட்டின் பல பகுதிகளில் மருந்து வைத்துள்ளாா்.
இதற்கிடையே புதன்கிழமை இரவு கிரிதரன் மற்றும் அவரது குடும்பத்தினா் தூங்க சென்றுள்ளனா். அப்போது வீட்டில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்தின் நெடியை சுவாசித்த அனைவருக்கும் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு பேரும் சிகிச்சைக்காக போரூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதில் சிகிச்சை பலனின்றி விஷாலினி, சாய் சுதா்சன் ஆகியோா் உயிரிழந்தனா். கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.