Gold Rate: உச்சம் தொட்ட தங்கம்! ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு; இன்றைய தங்...
கறிவேப்பிலை பயன்கள் : கேச வளர்ச்சி, கட்டுக்குள் சர்க்கரை, கல்லீரலுக்குக் காவல் - விரிவான தகவல்கள்
கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை; ஆனால், அத்தகைய கறிவேப்பிலையை நாம் உண்ணாமல் ஒதுக்கி வைப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், நீர்மோர் சகலத்திலும் கறிவேப்பிலை இடம் பெற்றிருந்தாலும் உணவு உண்ணும் போது ஒதுக்கி வைக்கும் அளவுக்கு கறிவேப்பிலை என்றாலே பலருக்கும் கசக்கிறது.
`உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. அதனால்தான் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது என்பதே மருத்துவர்களின் வாதம். மணம் நிறைந்த, மகத்துவம் மிகுந்த கறிவேப்பிலையில் உள்ள சத்துகளையும், மருத்துவக் குணங்களையும் பார்க்கலாம்.

அட, இவ்வளவு சத்துகளா...
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது.
வயிற்றுக்கோளாறுகள் வராது...
கறிவேப்பிலையில் உள்ள கார்பாசோல் அல்கலாய்டு (Carbazole Alkaloids) வயிற்றுப்போக்கைத் தடுக்கக்கூடிய ஆன்டி- டயாரியல் (Anti-Diarrheal properties) பண்பைக் கொண்டுள்ளதாக பல ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இதனால், கறிவேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை மைய அரைத்துச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம்.
ஆயுர்வேதத்தில் இது, வயிற்றுக்கோளாறுகளை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஜூஸாக மிக்ஸியில் அடித்து, அதனுடன் எலுமிச்சைப்பழச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது அரைத்த கறிவேப்பிலையை மோருடன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது செரிமானத்தை அதிகரிப்பதுடன், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். அஜீரணம், பசியின்மையையும் போக்கும்.

சர்க்கரைநோயாளிகளுக்கு வரப்பிரசாதம்!
கறிவேப்பிலை ஆன்டி - கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை ( LDL-low density lipoprotein) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்லை (HDL - High Density Lipoprotien) உயர்த்த உதவுகிறது. கறிவேப்பிலையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால், இது அனீமியா எனப்படும் ரத்தச்சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
கல்லீரலின் காவலன்!
கறிவேப்பிலையில் லுகேமியா (Leukemia), புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தடுக்கும் பீனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) நிறைந்துள்ளன.
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் கல்லீரல் செல்கள் அழிவைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும். மேலும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். இது ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதைக் குறைப்பதால், ரத்தம் ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருக்கும்.

கண் ஆரோக்கியம் காக்கும்
இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள் (Carotenoids) கார்னீயா பாதிப்பைக் கட்டுப்படுத்தும். பார்வை இழப்பு, மாலைக்கண் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.
முடி வளர்ச்சிக்கு உதவும்
கறிவேப்பிலையை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி நன்றாக வளரும். கருமையாக வளரும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. கறிவேப்பிலையை நாம் சாப்பிடாமல் ஒதுக்குவதன் காரணம் என்ன?
பலருக்கு கறிவேப்பிலை வாயில் கசப்பாகத் தோன்றுவதால் உணவு உண்ணும் போது ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால், உண்மையில் அதில் நிறைய சத்துக்கள் உள்ளன.
2. கறிவேப்பிலையில் என்னென்ன சத்துகள் உள்ளன?
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் A, B, C, E, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃபிளேவனாய்டுகள் ஆகியவை உள்ளன. கூடவே இரும்பு, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
3. கறிவேப்பிலை வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்துமா?
ஆம். கறிவேப்பிலையில் உள்ள Carbazole Alkaloids வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவுகிறது. இதை ஜூஸாகவோ, மோர் கலந்த பேஸ்டாகவோ எடுத்தால் செரிமானத்தையும் மேம்படுத்தும்.
4. சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை நல்லதா?
ஆம். கறிவேப்பிலை ஒரு ஆன்டி-கிளைசிமிக் உணவு. இது இரத்தத்தில் குளூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதேசமயம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது.
5. கறிவேப்பிலை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு எப்படித் துணைபுரிகிறது?
கறிவேப்பிலையில் உள்ள பீனால் மற்றும் கார்பாசோல் ஆல்கலாய்டுகள் புற்றுநோயைத் தடுக்கும்.
வைட்டமின் A & C கல்லீரல் செல்களை பாதுகாக்கும்.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்.
6. கறிவேப்பிலை கண் ஆரோக்கியத்திற்கு உதவுமா?
ஆம். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்டுகள் பார்வை இழப்பு, மாலைக்கண் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். பார்வைத்திறனை அதிகரிக்கவும் உதவும்.
7. முடி வளர்ச்சிக்காக கறிவேப்பிலை பயன்படுத்த முடியுமா?
முடியும்.
கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சைச் சாறை அரைத்து தலைமுடிக்கு தேய்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லைகள் குறையும்.
கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தினால் தலைமுடி கருமையாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.