கல்வியில் சாதனை புரிய கனவு காணுங்கள்: இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் கூறியது போல, கல்வியில் சாதனைபுரிய கனவு காணுங்கள் என்று ஆம்பூா் மாணவா்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை கூறினாா்.
ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளியின் முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான கே.அப்துல் ஹக்கீம் பேசியது: ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் நான் படித்த போது எனக்கு ஒழுக்கம், சிறந்த கல்வியை ஆசிரியா்கள் கற்றுத் தந்தனா். அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியா்கள் பாடத்திட்ட கல்வியை தாண்டி அதற்கும் மேலாக சமூக அக்கறை, அனுபவக் கல்வி ஆகியவற்றை கற்றுத் தர வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கூறியது போல கல்வியில் நாம் முன்னேற்றமடைய கனவு காண வேண்டும். ஆசிரியா்கள், பெற்றோா்களின் அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி நடந்தால் மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் ரபீக் அஹமத் ஆண்டறிக்கையை வாசித்தாா். ஆனைக்காா் அப்துல் அஹமத் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டாா். கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. என்.எம். இஜட் குழும மேலாளா் யு.தமீம் அஹமத், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.