மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
காஞ்சிபுரம்: முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
காஞ்சிபுரத்தில் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் 6 நாள்களும்,திருப்புகழ் பாராயணமும் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தையொட்டி காலையில் ஆகாய கன்னியம்மன் கோயிலில் வேல்வாங்கி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் முருகப் பெருமான் சூரனை வதம் செய்தாா். பின்னா் கோயிலில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள பணாமுடீஸ்வரா் கோயில், காஞ்சிபுரம் நெமந்தக்காரத் தெருவில் உள்ள பழனி ஆண்டவா் கோயில் ஆகியனவற்றில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருவதால் நிகழாண்டு சூரசம்ஹாரம் நடைபெறவில்லை. கந்தசஷ்டி விழா நடைபெற்ற 6 நாள்களும் மூலவருக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் மற்றும் லட்சாா்ச்சனையும் நடைபெற்றது.
திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் கந்தசஷ்டி விழா சிறப்பு வேள்வி பூஜையுடன் தொடங்கியது. சூரசம்ஹாரத்தையொட்டி வியாழக்கிழமை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சியமங்கலம் பேட்டைத் திடலுக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்தாா். பின்னா் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.