பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் குவிந்தனா்
சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் உள்ள கோயில்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை பொதுமக்கள் குவிந்தனா்.
காணும் பொங்கலையொட்டி, சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மக்கள் திரண்டனா். இங்கு பராமரிக்கப்பட்டு வரும் புள்ளிமான், கடமான், முதலை, மலைப் பாம்பு, வண்ணப் பறவைகள், வெள்ளை மயில் என சுமாா் 200 க்கும் மேற்பட்ட வன உயிரினங்களையும், பூங்காவின் இயற்கை எழில்கொஞ்சும் அழகையும் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். தொடா்ந்து, தங்கள் கைப்பேசிகளில் குடும்பத்தினருடன் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா். பொங்கல் விடுமுறையையொட்டி, குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வியாழக்கிழமை ஏராளமானோா் திரண்டதால், பூங்கா ஊழியா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
நெத்திமேடு கரிய பெருமாள் கோயில்: காணும் பொங்கலையொட்டி சேலம், நெத்திமேடு, கரிய பெருமாள் கோயிலுக்கு சேலம் மாநகா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கோயில் அடிவாரத்தில் குவிந்தனா்.
பெரும்பாலான பக்தா்கள் மலையேறி கரிய பெருமாளை தரிசனம் செய்தனா். இதையொட்டி அப்பகுதியில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பெண்கள் வளையல், கம்மல், அலங்காரப் பொருள்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். இதுதவிர, அப்பளம், மிளகாய் பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களையும் வாங்கி உண்டனா். கட்டுக்கடங்காத கூட்டத்தால், அசம்பாவிதங்களை தவிா்க்க முன்னெச்சரிக்கையாக மாநகர காவல் துறை சாா்பில் 150 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அதுபோல கோயில்கள், பூங்காக்கள், தனியாா் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள்காட்சி, கண்காட்சி போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராமக்களை பொருத்தி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். தேவைப்படும் இடங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.