முதலீட்டார்கள் தொடர்ந்து விற்று வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் என்னவாகும்? | IPS...
காப்பாற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம்... வெட்டாமல், சாலை போட மாற்று ஏற்பாடு!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. இவற்றை காப்பாற்ற விழுப்புரம் மாவட்ட சமூக ஆர்வலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக செப்டம்பர் 25ஆம் தேதி "சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் பழமையான மரங்கள்; பாதுகாக்க போராடும் தன்னார்வலர்கள்" என்ற தலைப்பில் ஆபத்தின் விழும்பில் இருக்கும் மரங்களை காப்பாற்ற விகடன் தளத்தில் கட்டுரை வெளியானது.
இக்கட்டுரையில் ஆல மரத்தின் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தோம். இதன் எதிரொலியாக நூறு வருட பழமையான ஆலமரத்தை வெட்டாமல், மாற்று ஏற்பாடு செய்து சாலை போட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நடவடிக்கை தொடர்பாக நம்மை தொடர்பு கொண்ட சமூக ஆர்வலர் பிரபு, "நெடுஞ்சாலைத்துறை 100 வருட பழமையான ஆலமரத்தை வெட்டுவதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்து சாலை போட திட்டமிட்டுள்ளதாக உறுதி கூறினார்கள்.
இதனை உறுதிசெய்ய நேற்று அப்பகுதிக்குச் சென்ற பொழுது ஆலமரத்திற்கு ஆபத்து விளைவிக்காமல் சாலை போடும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இதை பார்த்து மனம் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். இதற்காக விகடனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" எனக் கூறினார்.
தற்போது சாலை போடும் பணி தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. மரத்திற்கு சற்று முன்னும் பின்னும் ஜல்லிகளை கொண்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கத்திற்காக ஆலமரத்திற்கு எந்த ஒரு துன்பமும் விளைவிக்காமல் அதன் எதிர்ப்புறத்தில் உள்ள நிலத்தையொட்டி சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு எந்த ஒரு இடையூறும் வரவில்லை. சாலை போடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த மரத்தின் நிழலில் உட்கார்ந்தே ஓய்வெடுக்கிறார்கள். தன்னை அழிக்க வந்தவருக்கும் அடைக்கலம் கொடுக்கிறது. என்ன ஒரு அற்புதமான குணம். மரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாததை கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மரத்திலிருந்து வீசும் காற்று மனதை லேசாக மாற்றுகிறது.