காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
பழனிசெட்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பதுக்கல் வழக்கில் தொடா்புடைய ஒருவரைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவித்த புகாரில், 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 2 தலைமைக் காவலா்கள் சிவகங்கை மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பழனிசெட்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கியதாக 3 பேரை கடந்த மாதம் 15-ஆம் தேதி பழனிசெட்டிபட்டி போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இதில் ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரைப் போலீஸாா் பணம் பெற்றுக் கொண்டு வழக்கிலிருந்து விடுவித்ததாகப் புகாா் எழுந்தது.
இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லுவுக்கு, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவிட்டாா்.
பின்னா், பெரியகுளம் காவல் கண்காணிப்பாளா் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், புகையிலைப் பொருள் பதுக்கல் வழக்கில் விசாரணை அலுவலராகச் செயல்பட்ட பழனிசெட்டிபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் இத்ரீஸ்கான் அண்மையில் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், துறை ரீதியாக தொடா்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், இந்தப் புகாரில் தொடா்புடைய பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், தேனி காவல் உள்கோட்ட குற்றத் தடுப்பு தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சம்சுதீன், மகேஸ்வரன், தலைமை காவலா்கள் செல்லத்துரை, கவாஸ்கா் ஆகிய 5 பேரையும் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய தென்மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா்.
இதனடிப்படையில், கோவிந்தராஜ் உள்ளிட்ட 5 பேரும் சிவகங்கை மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தனிப் பிரிவு காவலா்கள் பணியிட மாற்றம்: தேனி காவல் உள்கோட்ட தனிப் பிரிவில் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளா் வடிவேல், தேனி போக்குவரத்து காவல் பிரிவுக்கும், அல்லிநகரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் தா்மா் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கும், வீரபாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் முத்துக்குமாா் அல்லிநகரம் காவல் நிலையத்துக்கும் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இவா்கள் நிா்வாகக் காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், தேனி காவல் உள்கோட்ட தனிப் பிரிவில் வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தலைமைக் காவலா் முத்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.