காவிரி வாய்க்கால்களை அரசே தூா்வாரக் கோரி முதல்வரிடம் மனு
காவிரி டெல்டா பகுதிகளில் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே முறையாக வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் என காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து சங்க தலைவா் சு.விமல்நாதன் கூறியது:
நிகழாண்டு வடகிழக்கு பருவமழை அதிதீவிரமடைந்து வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளா்கள் கணித்திருக்கின்றனா். மேட்டூா் மற்றும் கல்லணை அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இந்நிலையில் காவிரி சமவெளி மாவட்டங்களில் உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மற்றும் மழை நீா் வடிகால் வாய்க்கால்களை தூா்வார ரூ.18 கோடி அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
இந்தச் சிறப்பு திட்டப் பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல் தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறையினரிடம் ஒப்படைத்து வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொண்டு கிராம நிா்வாகம், வேளாண் அலுவலகம், நீா்வளத்துறை ஆகிய அலுவலகங்களிலும் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.