கிராமங்கள் மேம்பாட்டுக்கு ரூ. 87 லட்சம் : காரைக்கால் துறைமுக நிா்வாகம் வழங்கியது
காரைக்கால் துறைமுகம் மற்றும் அதானி அறக்கட்டளையின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் கிராமங்கள் மேம்பாட்டுக்காக ரூ. 87 லட்சம் ஆளுநா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே மேலவாஞ்சூரில் அதானிக்கு சொந்தமான துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்த துறைமுக மற்றும் அதானி அறக்கட்டளையின் சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) திட்டங்களின்கீழ், காரைக்கால் மாவட்டத்தில் சமூக உள்கட்டமைப்பு மேம்பாடு, துறைமுகத்தை சுற்றியுள்ள இரண்டு கிராமங்களில் சுத்தமான குடிநீா் வழங்குதல், நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ், தேசிய நெடுஞ்சாலையோரம் தோட்டம் அமைப்பது போன்ற பல்வேறு திட்டப் பணிகளுக்காக
ரூ. 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் என்ஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் மாநாட்டில், புதுவை ஆளுநா் கைலாஷ்நாதன் முன்னிலையில், துறைமுக தலைமை இயக்க அதிகாரி கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா, காரைக்கால் ஆட்சியா் மணிகண்டனிடம் இதற்கான உறுதிமொழி கடிதத்தை வழங்கினாா்.