குமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவால் விலை அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில், ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண்மையான ரப்பா் தோட்டங்களில் வழக்கமான இலையுதிா்வு காரணமாக பெரும்பாலான தோட்டங்களில் பால்வடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரப்பா் சந்தையில் ரப்பரின் வரத்து குறைவாக உள்ளது. இதேபோன்ற நிலை கேரளத்திலும் உள்ளது. இதையடுத்து, ரப்பா் சந்தையில் கடந்த சில வாரங்களாக ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது.
கோட்டயம் சந்தையில் திங்கள்கிழமை நிலவரப்படி , வணிகா் விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 189 ஆக அதிகரித்து காணப்பட்டது.
ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 186 இருந்தது. ஐ.எஸ்.எஸ். எனப்படும் தரம் பிரிக்கப்படாத ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 174.50 ஆக இருந்தது.
ரப்பா் வாரியம் வெளியிட்டுள்ள விலையில், ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 197 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 194 ஆகவும் இருந்தது.