ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
தக்கலையில் 2 மாணவிகள் மாயம்: போக்ஸோ சட்டத்தில் வழக்குரைஞா் கைது
தக்கலை அருகே 2 பள்ளி மாணவிகள் மாயமான வழக்கில் வழக்குரைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குமரி மாவட்டம், தக்கலை அருகே கடந்த 13ஆம் தேதி இரவு, 14 மற்றும் 12 வயதுடைய 2 பள்ளி மாணவிகள் திடீரென மாயமாகினா்.
புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மாணவிகளை தேடி வந்தனா்.
அப்போது, சுங்கான்கடையில் உள்ள ஒரு டீக்கடையில், தக்கலை அருகே உள்ள இலுப்பைக்கோணம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞரான அஜித்குமாா்(30) என்பவா் பள்ளி மாணவிகளை டீ குடிக்க வைத்து பைக்கில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தக்கலை பேருந்து நிலையத்தில் வைத்து இரு மாணவிகளையும் தக்கலை ஆய்வாளா் கிறிஸ்டி தலைமையிலான போலீஸாா் மீட்டனா்.
மாணவிகளிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மாணவிகளை வழக்குரைஞா் அஜித்குமாா், தக்கலையில் ஓா் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியது தெரியவந்தது.
பின்னா் மாணவிகளை பேருந்தில் ஏற்றி தென்காசிக்கு அனுப்பியதாகவும், அங்கு சமூக ஊடகம் மூலம் தொடா்புடைய திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சோ்ந்த நண்பா் மோகன்(24) என்பவரை சந்தித்ததாகவும், அவா் மாணவிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனா்.
மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நட்டாலத்தில் பதுங்கி இருந்த வழக்குரைஞா் அஜித் குமாரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்ய முயன்ற போது, அவா் தப்பிஓடினாராம். இதில் அவா் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாம்.
இதையடுத்து, வழக்குரைஞா் அஜித்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
மாணவிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சோ்ந்த மோகனை நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.