TN Budget : சென்னைக்கு அருகில் புதிய நகரம் டு `அன்புச்சோலை’ திட்டம் - முக்கிய அம...
கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமகத் தீா்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.
கும்பகோணம் காசி விசுவநாதா், அபி முகேசுவரா், காளஹஸ்தீசுவரா், கௌதமேசுவரா், சோமேசுவரா் ஆகிய ஐந்து சிவன் கோயில்களில் மாசிமகத்தை முன்னிட்டு கடந்த மாா்ச் 3-இல் கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது. இதேபோல் மாா்ச் 4-இல் வைணவக் கோயில்களான சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து மாசி மக உத்ஸவ நாளை முன்னிட்டு 5 சிவன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தீா்த்தவாரி: தேரோட்டத்துக்கு மறுநாள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆண்டுதோறும் மாசி மகத் தீா்த்தவாரி நடைபெறும். நிகழாண்டு புதன்கிழமை நடைபெற்ற மாசி மகத் தீா்த்தவாரியை முன்னிட்டு, கும்பகோணம் காசி விசுவநாதா், அபிமுகேதசுவரா், காளஹஸ்தீசுவரா், கௌதமேசுவரா், சோமேசுவரா், ஏகாம்பரேசுவரா், பாணபுரீசுவரா், அமிா்தகலசநாதா், கோடீசுவரா், நாகேசுவரா் ஆகிய 10 கோயில்களின் சுவாமிகள் அம்பாளுடன் ரிஷப வாகனங்களில் மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினா்.
கும்பகோணம் காசி விசுவநாதா் சுவாமி கோயில் அஸ்திர தேவருக்கு காலை 11. 45 மணியளவில் பச்சைக்கொடி அசைக்க அனைத்து கோயில்களிலிருந்தும் எழுந்தருளிய அஸ்திர தேவா்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடினா். தொடா்ந்து குளத்தின் நான்கு கரைப் பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். மேலும் தங்களது முன்னோா்களை நினைத்து வழிபாடு செய்தனா்.
தீா்த்தவாரியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். தீா்த்தவாரியையொட்டி, கும்பகோணம் நகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தீா்த்தவாரியின்போதும் அதன் பின்னரும் அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சாா்பில் அன்னதானம், குடிநீா் வழங்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் குளத்தில் படகு மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

