Ooty: ``குதறிய நிலையில் பெண் சடலம்..'' - புலியா? சிறுத்தையா? குழப்பத்தில் வனத்துறை! என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் தொட்டபெட்டா மலைச்சரிவில் அமைந்திருக்கிறது காலி பெட்டா பகுதி. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் நேற்று முன்தினம் காலை தேயிலை பறிக்கச் சென்ற அஞ்சலை என்கிற 50 வயது பெண் தொழிலாளி திடீரென மாயமாகியுள்ளார். இரவு வரை பல பகுதிகளிலும் தேடியும் கண்டறிய முடியாததால் உறவினர்கள் வேதனையில் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், காலி பெட்டா பகுதியில், பெண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு பதறிய உள்ளுர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில் வனவிலங்கு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டதில் வனவிலங்கு தாக்கி கொன்று, அவரின் உடல் பாகங்களையும் தின்றிருப்பதை உறுதி செய்துள்ளனர். அஞ்சலையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், குறிப்பிட்ட அந்த வனவிலங்கின் நடமாட்டம் குறித்து அறிவியல் பூர்வ தடயங்களை சேகரிக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துயரம் குறித்து பகிர்ந்த வனத்துறை, " தொட்டபெட்டா வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. வனத்தை விட்டு வெளியேறிய புலி அல்லது சிறுத்தை இவை இரண்டில் ஏதோவொரு உயிரினம் அந்த பெண்மணியைத் தாக்கிக் கொன்று உடலை தின்றுள்ளது. தோட்டத்தில் குதறிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு கூராய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலம் கிடந்த பகுதியில் வனவிலங்கின் கால்தடம், ரோமம் போன்றவற்றை சேகரித்து வருகிறோம்.

10 தானியங்கி கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கண்காணித்து வருகிறோம். புலியா? சிறுத்தையா? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உண்மை கண்டறியப்படும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக இழப்பீடு நிதி வழங்கப்பட்டுள்ளது. வனப்பணியாளர்களும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றனர்.