திருப்பத்தூர்: அரசுப் பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23-ம் நிதியாண்டில், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ நிதியில் ரூ.21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல், வகுப்பறையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது! அதில் ஒன்றாம் வகுப்பு மாணவர் பிரனீத் தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல மூன்றாம் வகுப்பு மாணவர்கள் விவேக், சுதர்சன் ஆகியோரும் லேசான காயமடைந்தனர். மாணவர்கள் அலறிக்கொண்டு வெளியே ஓடி உயிர்பிழைத்தனர்.

சம்பவம் நடந்ததும், நாட்றம்பள்ளி ஒன்றிய பி.டி.ஓ விநாயகம், அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். "திறக்கப்பட்ட முதல் 6 மாதங்களிலேயே கட்டடம் பிளவுபட்டு விழுந்தால், எதிர்காலத்தில் இந்தக் கட்டடத்தின் தரம் குறித்து அச்சப்பட வேண்டியிருக்கிறது" என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.



மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்தில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக் கட்டடத்தின் தரம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.