``குற்றச்செயலில் வந்த பணத்தில் சுகேஷ் கிப்ட் வாங்கி கொடுத்தார் என்று தெரியாது'' -நடிகை ஜாக்குலின்
நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்த பரிசுகள்
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுகேஷ் பலரிடம் பணமோசடி செய்துள்ளான். அவ்வாறு மோசடி செய்த பணத்தில் பாலிவுட் நடிகைகள், மாடல்களுக்கு பரிசுப்பொருள்களை சுகேஷ் வாங்கிக்கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் அதிக அளவில் பயனடைந்தது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்று அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. சுகேஷ் பரோலில் வந்த போது சென்னையில் சென்று ஜாக்குலின் அவரை சந்தித்து பேசிவிட்டு வந்தார். இதற்காக சுகேஷ் தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தான்.
ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு குதிரை, புனே, தங்க ஆபரணங்கள் என ஏராளமான பரிசு பொருள்கள் வாங்கிக்கொடுத்தான். அதுவும் சிறையில் இருந்துகொண்டே மாடல் அழகிகளுக்கு பரிசுப்பொருள்களை கூரியர் மூலமும், நேரடியாக வரவைத்தும் சுகேஷ் கொடுத்தான். சுகேஷ் மீதான பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று கோரி டெல்லி கோர்ட்டில் ஜாக்குலின் மனுத்தாக்கல் செய்தார்.
`எனக்கு தெரியாது' - ஜாக்குலின்
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த ஜாக்குலின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ``தான் பணமோசடி குற்றம் எதிலும் ஈடுபடவில்லை. குற்றச்செயல்களில் இருந்து கிடைத்த பணத்தின் மூலம் எனக்கு பரிசு பொருள்கள் கிடைக்கிறது என்று எனக்கு தெரியாது" என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஒருவர் ஒரு பரிசுப்பொருள்களை ஒருவரிடமிருந்து வாங்கும்போது அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய வேண்டுமா என்று நீதிபதி தாயல் கேள்வி எழுப்பினார். டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவி அதிதி சிங் என்பவரிடம் சிறையில் இருக்கும் அவரது கணவரை விடுவிக்க உதவுவதாக கூறி ரூ.200 கோடியை சுகேஷ் வாங்கியதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டி இருக்கிறது.
டொனால்டு ட்ரம்பிற்கு சுகேஷ் எழுதிய கடிதம்..
இதற்கிடையே ஜாக்குலின் பெர்னாண்டஸிற்காக ஹாலிவுட்டில் 135 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக சுகேஷ் தெரிவித்துள்ளான். இது தொடர்பாக சுகேஷ் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்பிற்கு சுகேஷ் எழுதி இருக்கும் கடிதத்தில், தான் காதலிக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரத்யேக ஸ்டூடியோவில் 1130 கோடி முதலீடு செய்ய இருக்கிறேன். அமெரிக்காவில் உள்ள தனது எல்.எஸ்.ஹோல்டிங் அண்ட் எல்.எஸ் கேமிங் நிறுவனத்தில் முதலீட்டை அடுத்த இரண்டு ஆண்டில் 4200 கோடியாக அதிகரிக்க இருப்பதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரைப்படங்கள் தயாரிக்கும் ஸ்டூடியோவில் 135 மில்லியன் டாலர் அளவுக்கு பங்குகளை வாங்க பேச்சுவார்த்தையை பேசி முடித்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளான்.
சுகேஷ் சந்திரசேகர்...
சுகேஷ் சந்திரசேகர் ஒரு சர்வதேச ஏமாற்றுப் பேர்வழி. 10 நிமிடங்கள் அவருடன் ஒரு தலைவர் பேசினார் என்றால், அவரது பேச்சில் மயங்கிவிடுவார். அந்தளவுக்கு கவரக்கூடிய வகையில், நுனிநாக்கு ஆங்கிலத்தில், நம்பும் வகையில் பேசுவார் சுகேஷ்.
2015ம் ஆண்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் திரைப்படங்கள் தயாரிப்பதாகவும், மிகப்பெரிய தொழிலதிபர் என்றும், சன் டிவி உரிமையாளர் என்றும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் உறவினர் என்றும் கூறி ஜாக்குலின் உள்பட பலரை சுகேஷ் ஏமாற்றி இருக்கிறான்.
பல அரசியல் வி.வி.ஐ.பி-க்களின் பெயர்களைச் சொல்லி பலரிடம் பணத்தை ஏமாற்றியிருக்கிறார். டி.டி.வி தினகரன் இரட்டை இலை வழக்கில் சிறையில் இருந்துகொண்டே, இன்னொரு சகோதரர்கள் அடங்கிய குடும்பத்தை ஏமாற்றி 215 கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக ஒரு வழக்கு பதிவானது.
ஜாக்குலினுக்கு ஒவ்வொரு பிறந்தநாள், தீபாவளியன்று வாழ்த்து செய்தி அனுப்புவதை சுகேஷ் வாடிக்கையாக கொண்டுள்ளான். அதோடு ஜாக்குலினுக்கு சொகுசு படகு ஒன்று வாங்கி இருப்பதாகவும், அது விரைவில் டெலிவரி செய்யப்படும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகேஷ் தெரிவித்திருந்தான். ஆனால் சுகேஷ் இவ்வாறு தொடர்ந்து கடிதங்களை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கோரி ஜாக்குலின் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.