குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அக்கா, தங்கை ஆகிய இருவா் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த களமாவூா் அருகே கண்ணக்கோண்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன். இவருக்கு 4 மகள்கள். இவா், கீரனூரில் புதிய வீடு கட்டிவந்தாா். தன் மகள்களான காயத்ரி (14), கவிஸ்ரீ (4) ஆகிய 2 பேரையும் வீட்டின் அருகே உள்ள காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இறக்கிவிட்டு ரவிச்சந்திரன் கீரனூா் வந்துவிட்டாா். வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால், கோவிலுக்குச் செல்லும் வழியில் உறவினா்கள் தேடிப்பாா்த்தனா்.
இதில், அப்பகுதியில் உள்ள கல்லக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, உறவினா்கள் சிறுமிகள் இருவரையும் மீட்டு கீரனூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமிகள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து இருவரின் சடலங்களும் கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. கூராய்வுக்குப் பிறகு சிறுமிகளின் சடலங்கள் திங்கள்கிழமை மாலை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். வழக்கமாக கோயிலுக்குச் செல்லும் வழிதான் என்றாலும், அண்மையில் பெய்த மழையால் அந்தக் குளத்தில் வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் அதிகமாக தண்ணீா் தேங்கியிருப்பதை சிறுமிகள் அறியாமல் இறங்கியிருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.