பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும் கட்சியா எதிர்க்கட்சிகளா?!
கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 20-ம் தேதி வரையில் நடக்கிறது. முன்னதாக எதிர்கட்சிகளிடம் 'அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் `ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய மசோதா, மகாாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல், சட்டப்பிரிவு 370 நீக்கம், மணிப்பூரில் மீண்டும் வெடித்திருக்கும் கலவரம்' குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இந்த சூழலில்தான் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகவும், இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்கு எதிராக ஊழல் புகார் வெடித்தது.
அதாவது சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. ஏற்கெனவே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு அதானி விவகாரம் கூடுதல் வலு சேர்த்து. இதை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவுக்கு எதிரான கொள்கை உள்ள அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளிக்கும் அமைப்புடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது. இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால், அவை கூடுவதும் பிறகு ஒத்திவைக்கப்படுவதுமாக இருக்கிறது. இதில் கடுப்பான இந்தியா கூட்டணி, 'நாடாளுமன்ற தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதானி விவகாரத்தை சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் சோனியா - சோரஸ் விவகாரத்தை பேசுவதற்கு பா.ஜ.க-வுக்கு அனுமதி கொடுக்கிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, "கடந்த 1952 முதல் இதுவரை அரசியலமைப்பின் 67-வது பிரிவின் கீழ், துணை ஜனாதிபதியை நீக்க எந்த தீர்மானமும் கொண்டு வரப்பட்டதில்லை. காரணம், துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை. விதிகளின்படி நாடாளுமன்றத்தை நடத்தினர். ஆனால் இன்று, நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.
சபை தலைவராக இருந்து கொண்டு ஜக்தீப் தன்கர் அரசியல் செய்கிறார். இதனால் நாட்டின் கண்ணியம் கெட்டுவிட்டது. எனவேதான் ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் எங்களுக்கு தனிப்பட்ட பகையோ, அரசியல் வெறுப்போ கிடையாது. அரசியலமைப்பு மரபுகளுக்கு மதிக்காமல், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார். பதவி உயர்வு பெறுவதற்காக அரசின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றுகிறார். எனவேதான் நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" எனக் கொதித்தார்.
இதற்கிடையில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தில் ஒரு காமெடியான விஷயம் நடந்தது. பா.ஜ.க-வினர் இந்தமுறை நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் பேச தொடங்கியதுமே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விடுகிறார்கள். இந்தமுறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம். அப்போது ஸ்பீக்கர் பேசினார். பிறகு ஆளும்கட்சி உறுப்பினர்கள் எழுந்து எதோ கத்தினார்கள்.
என்ன கத்தினார்கள் என்றே புரியவில்லை. உடனே ஸ்பீக்கர் நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு சென்றுவிட்டார். அவர்கள் பாராளுமன்றத்தை நடத்தவிடக்கூடாது என நினைக்கிறார்கள். குறிப்பாக அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்திருந்தோம். அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துவிட்டு, இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க முடியாது என சொல்வார்கள் என்பதுதான் எனது கணிப்பு. நாடாளுமன்றத்தில் வரலாறு, காமெடியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது" என்றார் காட்டமாக.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒவ்வொரு முறையும் பா.ஜ.க இப்படித்தான் அரசியல் செய்து வருகிறது. மணிப்பூர், வேளாண் சட்டங்கள், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்க விடுவதில்லை. பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்த பிறகு குரல் வாக்கெடுப்பு மூலமாக அந்த மசோதாக்களை நிறைவேற்றி விடுவார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் மீது தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்தி கூச்சலிடுவார்கள்.
அப்படிதான் சோனியா - சோரஸ் விவகாரத்தை பா.ஜ.க-வினர் கிளப்பி அமளியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். பிறகு எங்களது நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்குகிறார்கள் என பழி சுமத்துகிறார்கள். அதானி குறித்து பேசக்கூடாது என எதற்காக சொல்கிறீர்கள்?. இதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருமுறை அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வெளியாகும் போதும் பங்குசந்தையில் அவரது பங்குகள் குறைகிறது. அவருக்கு எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள்தான் கடன் கொடுத்திருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் இருப்பது பொதுமக்களின் பணம்தான்.
எனவே பொதுமக்களுக்காகத்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசுகின்றன. ஆனால் அதானி என்றாலே அலர்ஜியாகி பா.ஜ.க-வினர் ஓடுகிறார்கள். அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கூட பா.ஜ.க-வினருக்கு வெக்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் விவாதம் நடத்தியிருப்பார்கள். கொஞ்சம் கூட விவாதம் செய்ய முடியாது என்றால் எதற்காக பாராளுமன்ற கூட்டத்தை நடத்துகிறீர்கள். கனிமவள திருத்த சட்டத்தை கூட ஒரு கலாட்டாவின் போதுதான் நிறைவேற்றி இருக்கிறார்கள். பா.ஜ.க-வினருக்கு நாடாளுமன்றத்தை நடத்த விருப்பம் இல்லை. இதனால்தான் ராகுல் காந்தியை தேச துரோகி, இந்திய சிட்டிசன் இல்லை என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இதேநிலை நீடித்தால் உங்களுக்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் விளக்கம் கேட்டோம், "பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல அவர்கள் முன்பு செய்துகொண்டிருந்ததை தற்போது நாங்கள் செய்கிறோம் என்கிறார்களா என தெரியவில்லை. தமிழகச் சட்டமன்றத்தில்தான் எதிர்க்கட்சிகள் பேசுவதைக் காட்டுவதில்லை. ஆனால் நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் பார்க்க முடியும். அப்படியிருக்கும் போது பா.ஜ.க உறுப்பினர்களே எப்படி நாடாளுமன்றத்தை முடக்குவார்கள்?. அதானி விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே வழக்காடு மன்றங்கள் பார்த்துக்கொள்ளும். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த பிரச்னைகளையெல்லாம் திசைதிருப்ப இதுபோன்ற மோசமான அரசியலை எதிர்க்கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன.
ஜக்தீப் தன்கர் சட்டம் பயின்றவர். அவர் ராஜ்யசபா உறுப்பினராகவும், கவர்னராகவும் இருந்திருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. சட்டவிதிகளைப் பின்பற்றுவதாகச் சொன்னால் உடனே அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். இது அப்பட்டமான அரசியல். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான அரசியலைச் செய்ய வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள். அதேநேரத்தில் தமிழக முதல்வர் வீடு இருக்கும் பகுதிக்கு அதானி வந்தார் என்றும் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார் என்கிற யூகங்கள் இருக்கின்றன. எனவே என்னையோ, என் குடும்ப உறுப்பினர்களையோ சந்திக்கவில்லை என்று முதல்வர் சொல்ல வேண்டும். அதுதான் நாட்டு மக்களுக்கு கொடுக்கும் தெளிவான விளக்கமாக இருக்கும்" என்றார்.!