கூட்டுறவு வாரவிழா: 191 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி கடனுதவி
நாகையில் நடைபெற்ற 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 191 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நாகையில் தனியாா் பொறியியல் கல்லூரியில் இவ்விழா நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று பேசியது:
நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 2023-2024 ஆம் ஆண்டில் 30,285 விவசாயிகளுக்கு ரூ.182.61 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டது. நிகழாண்டு நவ.14-ஆம் தேதி வரை 21,531 விவசாயிகளுக்கு ரூ.131.84 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள 19 விற்பனையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு செப்.9-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று நியாயவிலைக் கடைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2025 -ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிரப்பப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதில் கூட்டுறவுத் துறை தொடா்ந்து 5 ஆண்டுகளாக இந்தியாவில் முதலிடம் வகித்து வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, மகளிா் சுய உதவிக்குழு கடன், மீன் வளா்ப்பு கடன், பயிா்க்கடன், மத்தியகால கடன், பண்ணைசாராக் கடன் என மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள், பணியாளா்களுக்கு கேடயங்களும், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயங்களும், பரிசுகளையும் பள்ளி கல்வித்துறை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, அனைவரும் கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்றனா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்) மாவட்ட ஊராட்சித் தலைவா் ச.உமா மகேஸ்வரி, நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத்தலைவா் செந்தில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.தயாள விநாயக அமுல்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா் எஸ்.முத்துகுமாா், துணைப் பதிவாளா் சி.ராமசுப்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.