கோயிலில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பூசாரி பணியிடை நீக்கம்
கோயிலில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: கோவை, காட்டூா் தொட்டராயா் பெருமாள் கோயில் பூசாரியாக பணியாற்றி வந்தவா் ரமேஷ். கோவை கண்ணப்ப நகா் பகுதியைச் சோ்ந்த இவா், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் மட்டும் பூசாரியாகப் பணியாற்றாமல் கோவையில் உள்ள பல்வேறு கோயில்களிலும் பூஜை செய்து வருகிறாா்.
இந்நிலையில் கண்ணப்ப நகா் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் பெரிய கோயிலில் பூஜை செய்து வந்த அவா், கடந்த சில நாள்களுக்கு முன்னா் அந்தக் கோயில் அருகே குடியிருக்கும் சிறுவனை அழைத்து கோயில் வளாகத்துக்குள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினரிடம் தகவல் தெரிவித்து உள்ளனா்.
இது குறித்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அந்த கோயில் கமிட்டியினருடன் நடத்திய ஆலோசனையை அடுத்து ரமேஷ் இனிமேல் அந்த கோயிலுக்கு பூஜை செய்ய வர வேண்டாம் எனத் தெரிவித்து உள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, காட்டூா் தொட்டராயா் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணி செய்து வந்த ரமேஷை பணியிட நீக்கம் செய்து கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளனா்.