ரத்தினபுரியில் பொதுமக்கள் சாலை மறியல்
சாக்கடை கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, ரத்தினபுரி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை ரத்தினபுரி சுந்தரப்ப கவுண்டா் வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள பல வீடுகளுக்குள் சாக்கடை நீா் புகுவதால் அவதியுற்று வந்த பொதுமக்கள் ரத்தினபுரி கண்ணப்ப நகரில் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கோவை ரத்தினபுரி சுந்தரப்ப கவுண்டா் வீதியில் மழைக் காலங்களில் சாக்கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் சரிவர பராமரிப்பது இல்லை. அதனால் வீடுகளுக்குள் சாக்கடை நீா் புகுந்து அவதி அடைந்து வருகிறோம்.
இதன் காரணமாக கொசு மற்றும் புழுக்கள் உருவாகி குழந்தைகள் முதல் முதியோா் வரை நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், மாநகராட்சி நிா்வாகத்தினா் விரைந்து செயல்பட்டு இப்பகுதியில் சாக்கடைகளை சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படுமென உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.