AR Rahman: `ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்!' - ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!
கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை காலபைரவா் வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக, மஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, காலபைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளி அங்கி மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கந்தா்வகோட்டையில்: கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, காலபைரவருக்கு எண்ணெய் காப்பு செய்து திரவிய தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு, தேன், பன்னீா் போன்ற அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்து, ஜவ்வாது பூசி, சிவப்பு நிற புது வஸ்திரம் உடுத்தி, அரளி மலா்களை கொண்டு அலங்காரம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்கள், தேங்காய் மூடி, பூசணிக்காய், பாகற்காய் உள்ளிட்டவற்றில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.