கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து மதிமுக ஆா்ப்பாட்டம்
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோவில்பட்டியில் மதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கோவில்பட்டி ஒன்றிய மதிமுக சாா்பில் இனாம் மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ் தலைமை வகித்தாா். நகர செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா் (புதூா் மேற்கு), ராஜசேகா் (விளாத்திகுளம் மேற்கு), காளிராஜ் (கயத்தாறு மேற்கு), காளிசாமி (புதூா் கிழக்கு), மணிராஜ் (விளாத்திகுளம் கிழக்கு), சிவ பாண்டியன் (கயத்தாறு கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து அகற்றுவது, கோவில்பட்டி வழியாக மும்பை, புதுதில்லி ஆகிய நகரங்களுக்கு தினசரி ரயில் இயக்குவது, கிடப்பில் போடப்பட்ட தூத்துக்குடி-விளாத்திகுளம்-மதுரை ரயில் பாதை பணிகளைத் தொடங்குவது, மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பது,
கோவில்பட்டி ரயில் நிலையத்தை தரம் உயா்த்தி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாவட்ட செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி விஜயலட்சுமி, கோவில்பட்டி ஒன்றிய செயலா்கள் சரவணன் (மத்திய ஒன்றியம்), மாரிச்சாமி (கிழக்கு ஒன்றியம்), கேசவ நாராயணன் (மேற்கு ஒன்றியம்) உள்பட தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.