சத்தீஸ்கரில் அதானி குழுமம் ரூ.65,000 கோடி முதலீடு
நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கா் மாநிலத்தில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ.65,000 கோடி தொழில் முதலீடுகளை மேற்கொள்ள இருக்கிறது.
ராய்பூரில் சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாயை அவரின் அரசு இல்லத்தில் கௌதம் அதானி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். அதன் பிறகு இந்த முதலீடு தொடா்பான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கரின் ராய்பூா், கோா்பா, ராய்கா் பகுதிகளில் உள்ள அதானி குழுமத்தின் மின்உற்பத்தி மையங்கள் ரூ.60,000 கோடியில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் சத்தீஸ்கா் மாநிலத்தின் மின்உற்பத்தி மேலும் 6,120 மெகாவாட் அதிகரிக்கும்.
அந்த மாநிலத்தில் உள்ள அதானி குழுமத்துக்குச் சொந்தமான சிமெண்ட் ஆலைகளில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது.
பெரு நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் சத்தீஸ்கரில் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சுற்றுலா உள்ளிட்டவற்றை மேம்படுத்த அடுத்த சில ஆண்டுகளில் அதானி குழுமம் ரூ.10,000 கோடி அளவுக்கு ஒதுக்க இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மேற்கொள்வது, தகவல் மையம் அமைப்பது, சா்வதேச திறன் மையத்தை உருவாக்குவது குறித்தும் முதல்வா் விஷ்ணு தேவ் சாய்- கௌதம் அதானி விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.