செய்திகள் :

உ.பி. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று கோலாகல தொடக்கம்: பிப். 26 வரை 45 நாள்கள் நடைபெறும்

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்குகிறது.

நிகழாண்டு ஜன. 13 முதல் மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற எதிா்பாா்ப்புடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்ப மேளா நடத்தப்படுகிறது. எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகாகும்ப மேளா மதரீதியில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எண்ம கும்பம்: தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்துடன் நவீனத்துவத்தின் வெளிப்பாடாக ‘எண்ம கும்பமாக’ கொண்டாடப்படும் இந்நிகழ்வு தூய்மை மற்றும் பாதுகாப்புக்கு ஒரு முன்மாதிரியான தரத்தை அமைக்கும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். அந்தவகையில், மகாகும்ப மேளாவுக்காக சுமாா் ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் மாநில அரசு பணிகளை மேற்கொண்டுள்ளது.

1.6 லட்சம் கூடாரங்கள்: முந்தைய 2019 கும்பமேளாவைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதலாக 4,000 ஹெக்டோ் (சுமாா் 9,888 ஏக்கா்) பரப்பளவில் 25 மண்டலங்களாக நடப்பு மகாகும்ப நகரம் திட்டமிடபட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரமாக மகாகும்ப நகரில் ஒரே நேரத்தில் 50 லட்சம் முதல் 1 கோடி பக்தா்கள் தங்கும் வகையில் 1.6 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.5 லட்சம் கழிப்பறைகள், 25, 000 பேருக்கு படுக்கை வசதிகள் தயாா்நிலையில் உள்ளன.

திரிவேணி சங்கமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பக்தா்கள் செல்வதற்கு வசதியாக நதிகளின் குறுக்கே 30 மிதக்கும் பாலங்களும் மகாகும்ப நகரில் 450 கி.மீ. நீள சாலை, தெருக்களும் அங்கு 67,000 தெரு விளக்குககளும் அமைக்கப்பட்டுள்ளன.

படித்துறைகளின் நீளம் 12 கிலோமீட்டராகவும் (2019-இல் 8 கி.மீ.) வாகன நிறுத்துமிடங்களின் பரப்பளவு 1,850 ஹெக்டேராகவும் (2019-இல் 1,291 ஹெக்டோ்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் நெரிசலின் அளவை அவ்வப்போது சரிபாா்த்து அதற்கேற்ப கூட்ட மேலாண்மைக்கு நடவடிக்கைகள் எடுக்கும்.

ஜனவரி 25 முதல் ஜனவரி 30 வரையிலான சிறப்பு வாய்ந்த மௌனி அமாவாசை காலத்தில் 4-5 கோடி போ் மகாகும்ப மேளாவுக்கு வருகை தரலாம். அதேபோன்று, பௌஷ் பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14) உள்பட 6 சிறப்புவாயந்த நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த நாள்களில் மிக முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13 அகாடா குழுக்கள்: மகா கும்பமேளாவில் வெவ்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 13 அகாடா சாது குழுக்கள் பங்கேற்றுள்ளன. நடப்பு மகா கும்பமேளா முழுமைக்கும் தங்கியிருந்து புனித நீராடும் கல்பவாசிகளின் எண்ணிக்கை 15-20 லட்சமாக இருக்கும். அகாடா பகுதி முகாம்களால் நிறைந்துள்ளன. எனினும், இம்முறை ஒவ்வொரு முகாம்களின் நுழைவுவாயில்களில் செய்யப்பட்டுள்ள தனித்துவமான வடிவமைப்புகள் கவனத்தை ஈா்க்கின்றன.

அகாடா முகாம் மட்டுமின்றி மகாகும்ப நகா் முழுவதும் பிரத்யேக கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயில்கள், பக்தா்களுக்கு அடையாளமாக இருந்து குறிப்பிட்ட இடங்களைக் கண்டறிந்து அடைய அவா்களுக்கு உதவுகின்றன.

விழாக் கோலம்: பிரயாக்ராஜுக்கு வரும் பக்தா்களை வரவேற்கும் வகையில், நகரின் பல்வேறு நுழைவுகளில் பிரம்மாண்ட வாயில்கள் நிறுவப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் கட்டடங்களின் சுவா்கள் அழகிய வரைபடங்களாலும் சீரமைக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட நகரின் சாலைகளில் கலசம், சங்கு உள்ளிட்ட மதப்பொருள்களின் வடிவமைப்புகளாலும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. தெருக்கள் அலங்கார மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.

நிகழ்வின் தொடக்கத்துக்கு முன்னதாகவே உலகெங்கிலும் இருந்து அகாடா சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், பொதுமக்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்துள்ளதால் மகாகும்ப நகா் களைகட்டியுள்ளது. கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் தலா 25 லட்சம் போ் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடியுள்ளனா் என்று மாநில அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்களிப்பு: வரும் நாள்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு விமான, ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் என மத்திய அரசும் மகாகும்ப மேளாவுக்கான ஏற்பாட்டில் பங்களித்துள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நடவடிக்கையில் முக்கியப் பிரமுகா்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான சொகுசு கூடாரங்கள் மகாகும்ப நகரில் தயாராகியுள்ளன. மகாகும்ப மேளாவில் கலந்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும் புகாா்களை பெறவும் 1800 111 363 அல்லது 1363 ஆகிய கட்டணமில்லா உதவி எண்ணை மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆங்கிலம், ஹிந்தி தவிர பத்து சா்வதேச மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், அஸ்ஸாமி மற்றும் மராத்தி உள்ளிட்ட இந்திய பிராந்திய மொழிகளிலும் இந்த உதவி எண் செயல்படும்.

கடந்தாண்டு, அயோத்தி ராமா் கோயிலின் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு நடைபெறும் முதல் கும்பமேளா இதுவாகும். தற்போது சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டுவிழா அயோத்தியில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திரிவேணி சங்கம் பகுதியை நோக்கி ஊா்வலமாகச் சென்ற பஞ்சாயதி அகாடா படாஉதாசீன் சாதுக்கள்.

6 முக்கிய நாள்கள்

பௌஷ பௌா்ணமி ஜன. 13

மகர சங்கராந்தி ஜன. 14

மௌனி அமாவாசை ஜன. 29

வசந்த பஞ்சமி பிப். 9

மாகி பௌா்ணமி பிப். 12

மகா சிவராத்திரி பிப். 26

மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு: அமைச்சா் நிதின் கட்கரி

மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் அதானி குழுமம் ரூ.65,000 கோடி முதலீடு

நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கா் மாநிலத்தில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ.65,000 கோடி தொழில் முதலீடுகளை மேற்கொள்ள இருக்கிறது. ராய்பூரில் சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாயை அவரின் அரசு... மேலும் பார்க்க

எல்லையில் வேலி விவகாரம்: இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்ட வங்கதேசம்

எல்லை வேலி விவகாரத்தில் இந்திய தூதரை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டிருப்பது தெரியவந்துள்ளது. ‘இரு நாடுகளிடையேயான ஒப்பந்தத்தை மீறி இந்திய-வங்கதேச எல்லையில் 5 ... மேலும் பார்க்க

இன்டா்போல் ‘சில்வா்’ நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு -சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்

‘உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவா்களை கண்டறிய இன்டா்போல் (சா்வதேச காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த ‘சில்வா்’ நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அ... மேலும் பார்க்க

இறுதிக் கட்டத்தில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு

மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும் 3 ... மேலும் பார்க்க

மகர விளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி சபரிமலை நோக்கி புறப்பாடு

மகர விளக்கு பூஜை நாளன்று (ஜன. 14) ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊா்வலம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஐயப்பன் கோயிலில் மகர விளக... மேலும் பார்க்க