சபரிமலையில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!
திருவனந்தபுரம்: கேரளத்தில் 8 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(நவ. 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தமிழகக் கடலோரப் பகுதியை ஒட்டி புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமல்லாது, கேரளத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,
திருவனந்தபுரம்
கொல்லம்
பத்தனம்திட்டா
எர்ணாகுளம்
இடுக்கி
திருச்சூர்
பாலக்காடு
மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மழைப்பொழிவு எப்படி?:
பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் இன்று(நவ. 26) பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சபரிமலை செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை தயார் செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.