விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
சாயல்குடி பகுதியில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் அறுவடைக்கு தயாரான நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிா்க்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, இதைச் சுற்றியுள்ள பிள்ளையாா்குளம், வேடகரிசல்குளம், கூரான்கோட்டை, அல்லிக்குளம், கோட்டையேந்தல், வெள்ளம்பல், மூக்கையூா் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் பெய்த தொடா் மழையால் கண்மாய்களில் தண்ணீா் நிரம்பி, வயல் வெளிகளிலும் தேங்கியது. இதனால் சோளம், உழுந்து உள்ளிட்ட சிறுதானிய பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. தற்போது நெல் மணிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் வயல்வெளிகளில் தேங்கியுள்ள மழை நீா் வடியாததால் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். 200 ஏக்கருக்கு மேல் விளைந்த நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இவை மீண்டும் முளைக்கத் தொடங்கி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த விவசாயி சத்தியமூா்த்தி கூறியதாவது:
ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்ட நாங்கள் வயல்களில் மழை நீா் தேங்கி இருப்பதால் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறக்க முடியாமலும், வேலையாள்கள் பற்றாக்குறையாலும் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிா்க்கிறோம். மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ள நெல் மணிகளால் இந்தப் பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.