சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்ச...
"சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் உள்ளார்" - மகன் பேச்சால் சர்ச்சை; பின்னணி என்ன?
கர்நாடகா முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகா காங்கிரஸில் தலைமை மாற்றம் குறித்து நீண்டநாட்களாகப் பேச்சு எழுந்துவருகிறது.
கட்சிக்குள் இருக்கும் புகைச்சல்களுக்குத் தூபம்போட்டது போல அமைந்துள்ளது சட்டமன்ற மேலவை உறுப்பினர் (MLC) யதீந்திராவின் பேச்சு.

ஏனென்றால் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சதீஷ் ஜர்கிஹோலி, சித்தராமையாவிற்குப் பிறகு தலைமைப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும், சித்தராமையா வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும் என்றும் யதீந்திரா கூறியிருக்கிறார்.
பெலகாவி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், "என் அப்பா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார். இப்போது, அவருக்கு ஒரு வலுவான சித்தாந்தமும் முற்போக்கான மனப்பான்மையும் கொண்ட ஒரு தலைவர் (அரசியல் வாரிசு) தேவை.
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை நிலைநிறுத்தி, கட்சியைத் திறம்பட வழிநடத்தக்கூடியவர் ஜர்கிஹோலி" எனப் பேசியுள்ளார். அந்தக் கூட்டத்தில் ஜர்கிஹோலியும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு
கடந்த மாதம், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு வழிவிட சித்தராமையா பதவியை ராஜினாமா செய்வதாக எழுந்த வதந்திகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டியிருந்தது.
அந்த விவகாரத்தில் குழப்பத்தைத் தீர்க்க கட்சியின் மூத்த தலைவரும் டி.கே.சிவக்குமார் ஆதரவாளருமான எல்.ஆர். சிவராம கவுடா வெளியிட்ட அறிக்கையும் தலைமை மாற்றத்தையே முன்னிறுத்தியது.
அதில், "சிவக்குமார் முதலமைச்சராவார், ஆனால் இறுதி முடிவு மேலிடத்தில் எடுக்கப்படும்" எனக் கூறப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து விளக்கம் கேட்டுள்ளது காங்கிரஸ் ஒழுக்கநெறி கமிட்டி.
இதைத்தொடர்ந்து வெளிப்படையாக தானே 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை முதலமைச்சராக இருப்பேன் என விளக்கமளித்தார் சித்தராமையா.
தந்தைக்கு எதிரான பேச்சா... சமயோஜிதமான காய் நகர்த்தலா?
இப்படியாக கர்நாடகா காங்கிரஸ் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்களும் சித்தராமையா ஆதரவாளர்களும் தனித்தனியாக கருத்துக்களை முன்வைக்கும் வேளையில், சித்தராமையாவின் விசுவாசியான உள்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலியின் பெயரை முன்மொழிந்திருக்கிறார் யதீந்திரா.

சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் எனப் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இது சிவக்குமார் முகாமுக்கு எதிரான நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
சிவக்குமார் பதில்!
இந்த நிலையில் யதீந்திரா பேச்சு குறித்த கேள்விக்கு டி.கே.சிவக்குமார். "அவர் (யதீந்திரா) பேசியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் பதில் சொல்ல முடியாது. என்னைப் பற்றி யாரும் விவாதிக்க அவசியமில்லை. நானும் சித்தராமையாவும் மேலிடத்தின் கட்டளைகளைப் பின்பற்றி ஒன்றாகப் பணியாற்றுவோம் என்பதைத் தெளிவாகப் பேசியிருக்கிறோம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனப் பதிலளித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.