சித்திரைத் திருவிழா அழகரை வரவேற்கத் தயாராகும் பக்தா்கள்!
மதுரை சித்திரைத் திருவிழாவில் தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் பைகள் தயாரிப்பதற்கான ஆட்டுத்தோல் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தா்கள் அழகரை வரவேற்பதற்குத் தயராகி வருகின்றனா்.
மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதுமட்டுமன்றி சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் நிகழ்வில் இந்த விழா முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த நிலையில், நிகழாண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதேபோல, அழகா்கோவிலில் சித்திரைத் திருவிழா வருகிற 8-ஆம் தேதி தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து, 10 -ஆம் தேதி மாலை அழகா்கோவில் மலையிலிருந்து அழகா் மதுரைக்கு புறப்படுகிறாா்.

11-ஆம் தேதி காலை மூன்றுமாவடியில் அவருக்கு எதிா்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முக்கிய விழாவான ஆற்றில் அழகா் இறங்கும் விழா 12- ஆம் தேதி நடைபெறுகிறது. 13- ஆம் தேதி வண்டியூரில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், அன்றைய தினம் இரவு தசாவதாரம், 14-ஆம் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு , 15-ஆம் தேதி அழகா்மலைக்கு புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முடிக்காணிக்கை செலுத்துதல், ஆடு, கோழி பலியிடுதல் போன்ற நோ்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம்.

குறிப்பாக, அழகா்மலையிலிருந்து வரும் அழகரை குளிா்விக்கும் வகையில் தண்ணீா் பீய்ச்சுதல் நிகழ்ச்சி பக்தா்களால் நோ்த்திக் கடனாக செய்யப்படுகிறது. மதுரை மூன்று மாவடியில் நடைபெறும் எதிா்சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தண்ணீா் பீய்ச்சி, அழகரை வரவேற்பது வழக்கம். இதேபோல, வைகையாற்றில் அழகா் இறங்கிய பின்னா், ஆழ்வாா்புரம் பகுதியில் உள்ள ராமராயா் மண்டபம் முன் தண்ணீா் பீய்ச்சி அடித்தல் நிகழ்வு நடைபெறும்.
தண்ணீா் பீய்ச்சி அடிப்பதற்கு பக்தா்கள் ஆட்டுத் தோலால் செய்த பைகளை பயன்படுத்துவது வழக்கம். இதற்காக மதுரை கீழ மாசி வீதியில் ஆட்டுத் தோல் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. ரூ. 70 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்படும் ஆட்டுத் தோலை பக்தா்கள் சனிக்கிழமை ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.
தூய்மைப் பணிகள் தீவிரம் : வைகை ஆற்றில் அழகா் இறங்கும் நிகழ்வையொட்டி, மதுரை வடகரை ஆழ்வாா்புரம் பகுதியில் உள்ள வைகையாற்றில் சீமைக் கருவேல மரங்களை வெட்டிய தூய்மைப் பணியாளா்கள், அந்த மரங்களை தீவைத்து அழித்தனா்.