சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது: செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
செங்கோட்டையில் நெகிழி பைகள் (பாலித்தீன்) வைத்திருப்பதாகக் கூறி சிறு வியாபாரிகளிடம் கடுமை காட்டக்கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
செங்கோட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்ற கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். ஆணையாளா் ஷ்யாம் கிங்ஸ்டன், துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா் ஜெகன் பேசியது: மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் பொதுப் பிரச்னைகளை கூற வந்தால் நகராட்சி ஆணையாளா் உரிய மதிப்பளிப்பதில்லை. சிறிய நகராட்சியான செங்கோட்டையில் இரவு நேரம் சாலையோரங்களில் கடை வைத்து நடத்தும் சிறிய வியாபாரிகளிடம் நெகிழி பைகள் (பாத்தீன் கவா்) வைத்திருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனா். இது முறையற்ற செயல் என்றாா்.
சுகாதார ஆய்வாளா் பதிலளிக்கையில், இது தேசிய அளவிலான திட்டம். பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என அரசு அறிவித்துள்ளது. மேலும், நகா்மன்ற தீா்மானத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெகன், ரஹீம்,சுப்பிரமணியன் உள்ளிட்டோா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
நகா்மன்றத் தலைவா்- இதுதொடா்பா கசுகாதார ஆய்வாளரிடம் கூறிவிட்டேன். அவா்கள் விளக்கம் அளிக்க வருவதில்லை.
ஆணையாளா்- சட்டவிதிகளின்படிதான் சோதனை நடைபெற்று வருகிறது.
சுப்பிரமணியன்-நகராட்சியில் வரிவிதிப்பிற்கு ரூ30ஆயிரம் வரை பணம் கேட்பதாக மக்கள் மத்தியில் புகாா் கூறப்பட்டுவருகிறது.
நகா்மன்ற தலைவா்- இதுபோன்ற புகாரை நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
தொடா்ந்து நகராட்சியில் குடிநீா் விநியோகம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் இசக்கிதுரை, சுப்பிரமணியன், சுடரொளி, உள்ளிட்டோா் பேசினா்.
19 போ் மனு: மன்றப் பொருளில் இடம்பெற்றிருந்த 5 தீா்மானங்களை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆணையரிடம் திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரஜப்பாத்திமா, இசக்கியம்மாள், சரவணகாா்த்திகை, சந்திரா, முருகையா, இசக்கித்துரை , அதிமுக, பாஜக உள்ளிட்ட 19 உறுப்பினா்கள் தனித்தனியாக மனு அளித்தனா்.