சிவகங்கையில் டிச.14-இல் மாரத்தான் போட்டி
சிவகங்கையில் போதை பொருள்களை பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி வருகிற டிச.14-இல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போதை பொருள்களை பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறையின் சாா்பில், சிவகங்கையில் வருகிற 14.12.2024 அன்று காலை 5.30 மணிக்கு மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பள்ளி, கல்லுாரிகளில் நேரடியாக பயிலும் 14 - வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிலையம் மூலம் பதிவு செய்ய வேண்டும். 18 முதல் 30 வயது வரை வயதுடைய தன்னாா்வலா்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்தப் போட்டியானது இருபாலருக்கும் 5 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்படவுள்ளது.
மேலும், இப்போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், தங்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, கல்வி நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்க வேண்டும். தன்னாா்வலா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநா் உரிம அட்டை ஆகியவற்றுடன் தங்களது சுயமின்னஞ்சல் முகவரியையும் தெரிவிக்க வேண்டும்.
இந்தப் போட்டியானது, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, மாவட்ட ஆட்சியா் அலுவலக தோரண வாயில் வழியாக வலதுபுறம் திரும்பி, திருப்பத்தூா் சாலையில் இலந்தங்குடிப்பட்டி கண்மாய் வரை 2.5 கிமீ தொலைவு வரை சென்று, திரும்பி பின், அதே வழியில் போட்டி தொடங்கிய இடத்தில் நிறைவு பெறும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது பெயரை வருகிற 12.12.2024 அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு, பதிவு செய்ய இயலாதவா்கள் போட்டி நாளான 14.12.2024 அன்று காலை 5 மணிக்கு முன்னதாக வந்து நேரில் பதிவு செய்து, தங்களின் வருகையை உறுதி செய்து போட்டியில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.