சிவன்மலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவம்பா் 7) மாலை நடைபெறுகிறது.
முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலித்து வரும் தலங்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் ஊதியூா் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 2- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், திருவுலா காட்சிகள் நடைபெற்று வருகின்றன. காங்கயம், ஊதியூா் பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வருகின்றனா்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை(நவம்பா் 7) மாலை நடைபெறுகிறது. சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாலை 5 மணிக்கும், ஊதியூா் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலில் இரவு 7 மணிக்கும் முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.