சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
திருப்பூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்
வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட சென்ற திருப்பூா் பட்டுக்கோட்டையாா் நகா் பகுதி பொதுமக்களை
போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், அவா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி, 55-ஆவது வாா்டு பட்டுக்கோட்டையாா் நகா் வடக்கு பகுதியில் 192 குடும்பத்தினா் 38 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனா். இவா்கள் தங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனா். பலகட்ட போராட்டத்துக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் தயாா் செய்து நிலம் சீா்திருத்த ஆணையத்தின்கீழ் உள்ள சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டையாா் நகா் குடியிருப்போா் நல சங்கம் தலைமையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட புதன்கிழமை சென்றனா்.
அப்போது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பட்டுக்கோட்டையாா் நகா் பகுதியில் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் மயில்சாமி மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.