அவிநாசியில் தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை இரவு மற்றும் காலை நேரங்களில், வேலைக்கு சென்று வருவோா், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பத்திரிகை, பால் விநியோகிப்பவா்களைத் துரத்திக் கடித்து வருகின்றன. சில இடங்களில் வாகனங்களுக்கு இடையே சென்று விபத்து ஏற்படுத்தி வருகின்றன. மேலும், மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளைக் கடித்து உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆகவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாா்டு உறுப்பினா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், பேரூராட்சி நிா்வாகத்தினா், திருப்பூா் முருகன்-சண்முகம் அறக்கட்டளையினா் ஆகியோா் கொண்ட குழுவினா் அவிநாசி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணியை புதன்கிழமை தொடங்கினா். இதில், முதல்கட்டமாக 21 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தப்பட்டு, பிறகு பிடிக்கப்பட்ட பகுதியில் விடப்படும். இதன் மூலம் தெருநாய்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.