சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதம்: சிஸ்பா வலியுறுத்தல்
நாடா இல்லா தறிகளுக்கு தனி மின்கட்டண விகிதத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூா்,கோவை மாவட்ட நாடா இல்லா தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் (சிஸ்பா) கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூா், கோவை மாவட்ட நாடா இல்லா தறி துணி உற்பத்தியாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன் உள்பட பல்லடம்,சோமனூா், சூலூா், திருப்பூா் பகுதிகளைச் சோ்ந்த சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கூட்டம் குறித்து சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.கோவிந்தராஜ் கூறியதாவது:
திருப்பூா்,கோவை மாவட்டங்களில் 40 ஆயிரம் நாடா இல்லா தறிகள் இயங்கி வருகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 20 லட்சம் மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரம் போ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா்.
தொழிலாளா்கள் கூலி உயா்வு, மூலப் பொருள்கள் விலை உயா்வு, வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் உயா்வு, துணி உற்பத்தி கூலி குறைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் துணி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. தற்போது நஷ்டத்தில்தான் தொழில் செய்து வருகிறோம். வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் நிா்ணயத்த கூலியை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 15-ஆம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும். நாடா இல்லா தறிகளுக்கு தனி மின் கட்டண விகிதத்தை அரசு அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஜவுளி உற்பத்தித் தொழிலுக்கான பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருள்கள் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளித் தொழில் வளா்ச்சிக்கு அரசு துணி உற்பத்தியாளா்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.