சென்னை: ஊட்டியில் வீடு என விளம்பரம்... 1.45 கோடி ரூபாய் மோசடி - சிக்கிய பில்டர்
சென்னையைச் சேர்ந்த இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் (59) என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தி.நகரில் இயங்கி வந்த கட்டுமான நிறுவனம், பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்றை கொடுத்திருந்தது. அந்த விளம்பரத்தில் உதகமண்டலத்தில் (ஊட்டி) வீடு கட்டி தருவதாக குறிப்பிட்டிருந்தனர். உடனடியாக நான் மற்றும் என்னுடைய உறவினர்கள் சிலர் ஆறு பிளாட்களை வாங்க முடிவு செய்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சங்கரலிங்கத்தைச் சந்தித்து பேசினோம்.
அப்போது அவர் 1,45,42,815 ரூபாய்க்கு ஆறு பிளாட்களை தருவதாகக் கூறினார். அப்போது எட்டு மாதங்களில் வீடுகளை கட்டித் தரவில்லை என்றால் வாடகை அல்லது இழப்பீடு தொகை தருவதாகவும் சங்கரலிங்கம் உறுதியளித்தார்.
அதை நம்பி பணத்தை கொடுத்தோம். ஆனால் அவர் வீடுகளை கட்டிக் கொடுக்காமல் எங்களை ஏமாற்றி வந்தார். எனவே சம்பந்தப்பட்ட சங்கரலிங்கம் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பதோடு எங்களின் பணத்தையும் மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இயங்கும் நம்பிக்கை ஆவண மோச பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த பில்டர் சங்கரலிங்கத்தை (60) போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு சங்கரலிங்கத்தை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளிக்கலாம் எனவும் போலீஸார் தெரிவிததுள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...