சென்னை: குளியலறையில் சிறுமி மர்ம மரணம் - போலீஸ் விசாரணை!
சென்னை அமைந்தகரை, மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷாத். இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரின் வீட்டில் கடந்த சில மாதங்களாக கும்பகோணம், திருவிடைமருதூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ரம்யா (பெயர் மாற்றம்) வேலை செய்து வந்தார். இவர் வீட்டின் குளியலறையில் உயிரிழந்து கிடப்பதாக அமைந்தகரை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சிறுமி ரம்யாவின் அம்மாவுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சிறுமியின் மரணம் குறித்து அவரை வேலைக்கு அமர்த்திய முகமது நிஷாத், அவரின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. அதனால் சிறுமியின் மரணத்தில் அமைந்தகரை போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீஸார் தயாராக உள்ளனர்.
இது குறித்து அமைந்தகரை போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த சிறுமிக்கு அப்பா இல்லை. அம்மாவின் அரவணைப்பில்தான் வளர்ந்து வந்தார். அதனால் வீட்டு வேலைக்காக முகமது நிஷாத் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீபாவளி தினத்தன்று முகமது நிஷாத் வீட்டில் அவருடைய 4 வயது மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. அதனால் சிறுமி ரம்யாவை முகமது நிஷாத்தின் குடும்பத்தினர் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு குளிக்கச் சென்ற ரம்யா நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. அதனால் பயந்து போன முகமது நிஷாத்தின் குடும்பத்தினர் கதவை தட்டி பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு கதவை உடைத்து உள்ளே பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுதான் எங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிறுமியின் உடலிலும் சில காயங்கள் இருக்கின்றன. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். சிறுமி உயிரிழந்த தகவலை காவல் நிலையத்துக்குக்கூட தெரிவிக்காமல் முகமது நிஷாத்தின் குடும்பம் தலைமறைவாகி விட்டது. தற்போது அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பிறகே சிறுமியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.
இதற்கிடையில் சிறுமிக்கு 16 வயதே ஆவதால் அவரை எப்படி வீட்டு வேலைக்கு பணியமர்த்தினார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. குளியலறையில் மர்மான முறையில் சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.