Inbox 2.0 Eps 11: உங்கள் கோரிக்கை நிறைவேறியது! | Cinema Vikatan
சென்னை: வியாசர்பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து சோகம் - குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்
சென்னை கொடுங்கையூர், முத்தமிழ்நகர், 8-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி கௌசல்யா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டரை வயதில் புகழ்வேலன் என்ற மகன் உள்ளார். கடந்த 17-ம் தேதி பாலமுருகன், தன்னுடைய மனைவி, மகனுடன் பைக்கில் சென்றிருக்கிறார். பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதியில் புகழ்வேலன் அமர்ந்திருந்தார்.
வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக் சென்ற போது திடீரென புகழ்வேலன் கதறி அழுதார். உடனே பைக்கை நிறுத்திய பாலமுருகன், என்னவென்று பார்த்தபோது புகழ்வேலனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் கொட்டியது. அதைப்பார்த்து அலறி துடித்த பாலருமுருகனும் அவரின் மனைவி கௌசல்யாவும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புகழ்வேலனுக்கு ஏழு தையல்கள் போடப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து வியாசர்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னொரு சம்பவம்:
குழந்தை புகழ்வேலனின் கழுத்தை அறுத்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அதே பகுதியில் இன்னொரு சம்பவம் நடந்தது. சென்னை ராயபுரம் தொப்பை தெருவைச் சேர்ந்த ஜிலானி பாட்ஷா (48). இவர் கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 17-ம் தேதி மாமியார் வீட்டுக்கு பைக்கில் ஜிலானி பாட்ஷா சென்றுள்ளார். வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்ற போது இவரின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்துள்ளது. இதில் காயமடைந்த ஜிலானி பாட்ஷா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததையொட்டி மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள். ஏற்கெனவே மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அதை விற்றது யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.