World Chess Championship : 'டிங் லிரன் Vs குகேஷ்' - சாதிப்பாரா தமிழக வீரர்? - மு...
சென்னை: 5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தல்; கோடீஸ்வரனாக ஆசைப்பட்ட பட்டதாரியின் மாஸ்டர் பிளான்!
சீனாவிலிருந்து சரக்கு கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் கன்டெய்னரில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான note pad கொண்டு வரப்பட்டது. நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் துறைமுகத்தில் உள்ள சென்னை இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் யார்டில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து லேப்டாப் கம்பெனியிலிருந்து கன்டெய்னரை எடுத்துச் செல்ல செப்டம்பர் 11-ம் தேதி அதிகாரிகள் வந்தனர். அப்போதுதான் அந்த கன்டெய்னரைக் காணவில்லை.
அது தொடர்பாக துறைமுகம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. விசாரணையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதியே கன்டெய்னர் போலி ஆவணங்கள் கொடுத்து எடுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரைக் கடத்திய கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நரேந்திர நாயர் மேற்பார்வையில் இணை கமிஷனர் பர்வேஸ் குமார், துணை கமிஷனர் சுந்தரவடிவேல் வழிகாட்டுதலின்படி உதவி கமிஷனர் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் சிலம்புசெல்வன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கடத்தப்பட்ட கன்டெய்னரையும் நோட் பேடுகளையும் கடத்தல் கும்பலையும் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து துறைமுகம் உதவி கமிஷனர் ராஜசேகரனிடம் பேசினோம். ``5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தப்பட்டதாக புகார் வந்ததும் கன்டெய்னரை எடுத்துச் செல்ல அனுமதித்த ஊழியர்களிடமிருந்து விசாரணையைத் தொடங்கினோம். அப்போது கன்டெய்னரை யார்டிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் வெளியில் செல்ல அனுமதித்தது சென்னை இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் ஊழியர் திருவொற்றியூரைச் சேர்ந்த இளவரசன் எனத் தெரிந்தது. ஆனால் அவர் செப்டம்பர் 7-ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை. அதனால் அவரைத் தேடி வந்தநிலையில் கடத்தப்பட்ட கன்டெய்னரில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதனால் ஜி.பி.எஸ் கருவிகளின் சிக்னலை ஆய்வு செய்தபோது அது திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரைக் காட்டியது. உடனடியாக அங்குச் சென்று பார்த்தபோது கடத்தப்பட்ட கன்டெய்னர் இல்லை. ஆனால் சிக்னல் காட்டிய இடத்தில் இரண்டு லாரிகள் அநாதையாக நின்றன.
அந்த லாரிகளை ஆய்வு செய்தபோது அதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோட் பேடுகள் இருந்தன. இதையடுத்து 5,200-க்கும் மேற்பட்ட நோட் பேடுகளையும் இரண்டு லாரிகளையும் துறைமுகம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் எஸ்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த டிரெய்லர் லாரி டிரைவர் மணிகண்டன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பால்ராஜ், கடத்தலுக்கு உதவிய திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ்,நெப்போலியன், சிவபாலன், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த முத்துராஜ், அரசு பஸ் டிரைவர் சங்கரன் ஆகிய ஏழு பேரைக் கைது செய்தோம். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட கன்டெய்னரைப் பறிமுதல் செய்தோம். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இளவரசன், அவரின் அக்காள் மகனான விக்கி என்கிற சின்னசாமி ஆகியோரைத் தேடிவந்தோம்.
நோட் பேடுகளை மொத்தமாக விற்க முடிவு செய்து பெங்களூரு, மும்பைக்கு இளவரசன், விக்கி ஆகியோர் சென்ற தகவல் கிடைத்தது. அதனால் அவர்களைத் தேடிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்தபோது கன்டெய்னரில் வந்த நோட்பேடுகளைத் திருடியதற்கான காரணம் தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் துரிதமாக செயல்பட்டு 9 பேரையும் கடத்தப்பட்ட கன்டெய்னர், 34 கோடி ரூபாய் மதிப்பிலான நோட் பேடுகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்" என்றார்.
இந்த வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``கைது செய்யப்பட்ட இளவரசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருவொற்றியூர் பகுதியில் அம்மா, சகோதரி என கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். தற்போது 33,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை செய்து வரும் இளவரசன், பி.ஏ. ஆங்கிலம் படித்திருக்கிறார். இவரின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவச் செலவுக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார். அதோடு ஆடம்பரமாக வாழ்ந்ததால் இளவரசனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்டிருக்கிறது. கடன் தொல்லையால் நிம்மதியிழந்த இளவரசன், ஏதாவது செய்து கோடீஸ்வரனாக ஆசைப்பட்டிருக்கிறார்.
இந்தச் சமயத்தில்தான் 34 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்பேடுகள் யார்டில் வைக்கப்பட்ட தகவல் இளவரசனுக்கு தெரியவந்தது. அதற்குரிய பில், ஆவணங்கள் அனைத்தையும் பார்த்த இளவரசன், கன்டெய்னரை கடத்த தன்னுடைய கூட்டாளிகளுடன் திட்டமிட்டார். இதையடுத்து கன்டெய்னரை துறைமுகத்தின் யார்டிலிருந்து வெளியில் செல்ல போலியான ஆவணங்களை தயாரித்த இளவரசன், அதை தன்னுடைய அக்காள் மகன் விக்கி மூலம் வெளியில் எடுத்துச் சென்றிருக்கிறார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் வைத்து கன்டெய்னரை உடைத்து நோட் பேடுகளை திருட முயன்றபோதுதான் அதில் ஜிபி்எஸ் கருவி இருப்பதை பார்த்து இளவரசனும் அவரின் கூட்டாளிகளும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
பாபநாசம் படத்தில் வரும் காட்சியைப் போல ஜிபிஎஸ் கருவிகளை வடமாநிலத்துக்குச் சென்ற ஒரு லாரியில் போட்டிருக்கிறது அந்தக் கும்பல். ஆனால் நோட் பேடுகளுக்கான ஒரிஜினல் ரசீது இல்லாததால் பெங்களூரு, மும்பையில் அவற்றை யாரும் வாங்கவில்லை முன்வரவில்லை. கன்டெய்னருடன் கடத்தப்பட்ட நோட் பேடுகளை விற்க முடியாத சூழலில் இந்தக் கும்பல் எங்களிடம் சிக்கிக் கொண்டது. இந்தக் கடத்தல் வழக்கில் அரசு போக்குவரத்து கழக டிரைவர் சங்கரன் என்பவரும் சிக்கியிருக்கிறார்" என்றனர்.