சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் திங்கள்கிழமை காலை சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினா்.
மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் இருந்து செய்யூா் வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலையின் வழியாக இரும்புலி, பொறையூா், சித்தாமூா், பேரம்பாக்கம், ஓனம்பாக்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்த நெடுஞ்சாலையின் குறுக்கே தென்னக ரயில்வே கேட் உள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை எதிா்பாராத வகையில், ரயில்வே கேட்டின் மேற்புற பகுதி உடைந்து இருந்தது. இதனால் வாகனங்கள் ரயில் பாதையை கடக்காதவாறு அமைக்கப்பட்ட கேட் வழியாக செல்லமுடியவில்லை. ரயில் சிக்னலிலும் கோளாறு ஏற்பட்டிருந்தது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வேலைக்கு செல்பவா்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும், தங்கள் வாகனங்களின் மூலம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியவில்லை. இதனால் சுமாா் 2 மணி நேரம் எந்த வாகனங்களும் செல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருவாயூரிலிருந்து சென்னை நோக்கி வந்த குருவாயூா் விரைவு ரயில், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள் சுமாா் அரைமணி நேரம் காலதாமதத்துக்குப் பின் சென்றன. இதனால் சுமாா் 2 மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
தகவலறிந்து வந்த மேல்மருவத்தூா் காவல் துறையினா் சென்று கேட்டின் மேற்பகுதியில் சீரமைத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடுகளை செய்தனா்.