ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடலை தோண்டியெடுப்பது தற்காலிகமாக நிறுத்தம்!
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69) என்பவரை ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறி கடந்த வியாழக்கிழமை (ஜன.09) அன்று அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அம்மாவட்டத்தின் துணை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவரது சமாதியைத் தோண்டி அவரது உடலை வெளியே எடுத்து உடற்கூறாய்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.13) நெய்யதிங்கரா காவல் துறையினர் மற்றும் வருவாய் கோட்ட அதிகாரிகள் அவரது உடலை தோண்டி எடுக்கும் பணியை மேற்கொள்ள சென்றனர். அந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர், அவரது சமாதியை தோண்ட அதனைச் சுற்றி முதற்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபன் சாமியின் குடும்பத்தினர் அவரது சமாதியின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க: சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 50 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிப்பு!
பின்னர், காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி அவர்களது வீட்டிற்குள் அடைத்தனர். ஆனால், அதற்குள் ஹிந்து ஐகிய வெடி, விடிஎஸ்பி போன்ற ஹிந்து மத அமைப்புகள் அங்கு வந்து அவரது உடலைத் தோண்டுவது அவர்களது மதநம்பிக்கையை புண்படுத்தும் செயல் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், ஏற்கனவே அவர்களது அக்கம்பக்கத்தினர் கோபன் சுவாமியின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் நடந்துக்கொண்டது மிகவும் சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறியிருந்த நிலையில் அவரது சமாதியை தோண்டி உண்மையைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், காவல் துறையினருக்கும், மத அமைப்புகளுக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரது உடலைத் தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், எப்போது தோண்டப்படும் என்பது குறித்து இன்று (ஜன.14) தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், இருதரப்பும் அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கேயே முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.