Asirvad Microfinance -க்கு RBI விதித்த தடை, Manappuram Finance பங்கு விலை சரியும...
ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாமலை
ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என எதிர்க்கட்சிகள் கூறி, அவர் திமுகவினருடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கூறினர்.
இதையடுத்து அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அளித்த பதிலுரையில், 'ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல. அவர் திமுக அனுதாபி, ஆதரவாளர். அதனை மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் படம் எடுத்திருக்கலாம். அதிலும் தவறில்லை. அவர் யாராக இருந்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், நிச்சயமாக அவர் திமுக உறுப்பினர் அல்ல' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ஞானசேகரன் திமுக அனுதாபிதான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் உறுதி
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று.
ஞானசேகரன் திமுக அனுதாபிதான், ஆனால் திமுக நிர்வாகி இல்லை என்கிறார்கள் இன்று.
விரைவில் "யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகிதான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.