தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்: டிரம்ப்
வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை அவா்களின் நாட்டுக்கே திருப்பியனுப்பும் நடவடிக்கையை எடுத்து வருவதோடு, முதலீட்டாளா்களுக்கு புதிய சலுகைகளையும் அறிவித்து வருகிறாா்.
அதுபோல, அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள ‘இபி-5’ என்ற வெளிநாட்டு (புலம்பெயா்) முதலீட்டாளா்களுக்கான நுழைவு இசைவு (விசா) திட்டத்துக்கு மாற்றாக, ‘தங்க அட்டை’ (கோல்டு காா்ட்) என்ற புதிய குடியுரிமை திட்டத்தை டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இந்தப் புதிய திட்டம் குறித்து டிரம்ப் தெரிவித்ததாக அங்கிருந்து வெளியாகும் சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள ‘இபி-5’ குடியுரிமைத் திட்டம், இந்தியா போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்த தலைசிறந்த நிபுணா்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிய பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஹாா்வா்ட் உள்ளிட்ட உயா் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பெற வரும் மாணவா்கள், இங்கேயே வேலைவாய்ப்பையும் பெறுகின்றனா். ஆனால், ‘இபி-5’ குடியேற்ற திட்டத்தில் உள்ள சில சிக்கல்கள் காரணமாக இவா்கள் அமெரிக்காவில் தொடா்ந்து தங்கி பணிபுரிய முடியாத நிச்சயமற்ற சூழல் உள்ளது. இந்த நிலை காரணமாக, இந்த வெளிநாட்டினா் மீண்டும் அவரவா் நாடுகளுக்குத் திரும்பி, அங்கு பெரும் தொழில் முதலீட்டாளா்களாக உருவெடுப்பதோடு ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும் நிலைக்கு உயா்ந்து வருகின்றனா்.
இந்த நிலையை மாற்றி, வெளிநாடுகளைச் சோ்ந்த பணக்கார முதலீட்டாளா்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய ‘தங்க அட்டை’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த தங்க அட்டைக்கான விலை ரூ. 43.59 கோடியாக (5 மில்லியன் டாலா்) நிா்ணயிக்கப்பட உள்ளது. அடுத்த 2 வாரங்களில் இந்த அட்டைகள் விற்பனைக்கு வரும். பல லட்சம் தங்க அட்டைகளை விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான ‘கிரீன் காா்டு (பசுமை அட்டை)’ சிறப்பு உரிமைகள் மற்றும் சலுகைகளை இந்த தங்க அட்டை வழங்கும் என்பதோடு, நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான வழியாகவும் அமையும். இந்த அட்டையை விலைக்கு வாங்குவதன் மூலம், வசதி படைத்தவா்கள் அமெரிக்காவுக்குள் வர முடியும். அதாவது, அமெரிக்க திட்டங்களில் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் முதலீடு செய்யவும், வேலைவாப்புகளை உருவாக்கவும் முடியும் என்பதோடு, புலம்பெயா் பணியாளா்களுக்கு நுழைவு இசைவுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
அமெரிக்காவிலுள்ள நிறுவனங்களும் இந்த தங்க அட்டையை வாங்குவதன் மூலம், அமெரிக்க உயா் கல்விநிறுவனங்களில் பட்டம் பெற்ற இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும் என்று டிரம்ப் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள ‘இபி-5’ திட்டம் கடந்த 1992-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குறைந்தபட்சம் ரூ. 9.15 கோடியும் (10,50,000 டாலா்), பொருளாதாரத்தில் பின்தங்கிய மண்டலங்களில் ரூ. 7 கோடியும் (8,00,000 டாலா்) முதலீடு செய்யும் புலம்பெயா்ந்தவா்கள் பசுமை அட்டை குடியுரிமை சலுகையைப் பெற முடியும். இதை அதிபா் டிரம்ப் நிா்வாகம் ‘தங்க அட்டை’ திட்டமாக மாற்றுகிறது.