ஊக்க மருந்து சர்ச்சை: லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து சின்னர் விலகல்!
துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
இஸ்தான்புல் : துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) என்ற ஆயுதப் படையை கலைக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் நிறுவனா் அப்துல்லா ஓசலான் உத்தரவிட்டுள்ளாா்.
கிளா்ச்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, குா்து ஆதரவு கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் இஸ்தான்புல்லில் உள்ள சிறையில் ஓசலானை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
அதனைத் தொடா்ந்து அவா்கள் மூலம் தனது கிளா்ச்சிப் படையினருக்கு ஓசலான் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி உடனடியாக பொதுக் குழு கூட்டத்தைக் கூட்டி, அமைப்பை கலைப்பதற்கான தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும், அமைப்பைச் சோ்ந்த அனைவரும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓசலான் உத்தரவிட்டுள்ளாா்.
துருக்கியில் குா்து இனத்தவா் பெரும்பான்மையாக வசிக்கும் குா்திஸ்தான் மாகாணத்தை தனி நாட்டாக்க வலியுறுத்தி தொடங்கப்பட்ட பிகேகே, பின்னா் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வந்தது.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிகேகே அமைப்பினா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.
இந்தச் சூழலில், பிகேகே அமைப்பின் நிறுவனா் அப்துல்லா ஓசலான் கடந்த 1999 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இருந்தாலும் அவரின் அமைப்பு தொடா்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவந்தது. அரசுக்கும் அந்தத் தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்வதற்கான முயற்சி கடந்த 2015-இல் தோல்வியடைந்தது. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள சமாதான முயற்சியின் பலனாக பிகேகே அமைப்பை கலைக்குமாறு தலைவா் ஓசலான் தற்போது உத்தரவிட்டுள்ளாா்.