'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்...
TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' - விமர்சனங்களுக்கு தவெக ராஜ்மோகன் பதில்
தவெக-வின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வில் விஜய் பேசிய நிறைய விஷயங்களும் விவாதமாகி இருக்கிறது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசையும் மத்திய அரசையும் ஒரே தராசில் வைத்து நையாண்டியாக பேசியது, மீண்டும் மீண்டும் பாசிசமா பாயாசமா என பாசிசத்தை இயல்பாக்கும் தொனியில் பேசியது, ஹைலைட்டாக 'தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிக்கு நம்முடைய கட்சித் தோழர்களையே நியமிக்கப் போகிறோம்.' என பெருமை பேசியது வரை எல்லாமும் சமூகவலைதளங்களில் விமர்சன ரீதியாக ட்ரோல் ஆகி வருகிறது.
இந்நிலையில், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் அந்த ஆண்டு விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவருமான ராஜ் மோகனை பேட்டிக்காக தொடர்புகொண்டு பேசினேன்.

``கட்சி ஆரம்பித்து ஒரு ஆண்டு முடிந்து விட்டது. மாநில மாநாட்டை நடத்தி முடித்துவிட்டீர்கள். ஆனால், இன்னமும் விஜய் யாரையும் குறிப்பிட்டே பேசவில்லையே. ஆண்டு விழாவிலும் 'கொள்கை எதிரிகள்', 'கபடதாரிகள்' என Code Word லேயே பேசிக்கொண்டிருக்கிறாரே. நேரடியாக யாரென குறிப்பிட்டு பேசுவதில் அப்படியென்ன தயக்கம்?”
``எங்களின் தலைவரை அரசியல் நாகரிகத்தின் மாஸ்டராக பார்க்கிறோம். அவர் பேசும் அத்தனை விஷயங்களும் மாநில அரசையும், மத்திய அரசையும் குறிப்பிட்டுதான் என்பது எல்லாருக்குமே தெரியுமே. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யாமல் அதிகாரத்தை கேள்வி கேட்கிறோம். மும்மொழிக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறதோ அதுதான் எங்களின் நிலைப்பாடும். அண்ணா உருவாக்கிய திமுகவின் கொள்கைகள் எங்களுக்கு எதிரி அல்ல. அந்த அரசியலின் வழி வந்து இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் எங்களின் எதிரிகள். அதனால் நாங்கள் அந்த அதிகாரத்தைதான் எதிர்க்கிறோம்.”
``பெயர் சொல்லாமல் விமர்சிப்பதுதான் நாகரிகமா? விமர்சனத்தை கண்ணியத்தோடு செய்வதுதானே நாகரிகம்? திமுக எதிர்ப்பைத்தான் தன்னுடைய அரசியலாக விஜய் முன்னெடுக்கிறார். எனில், 2026 சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் இப்படியே பெயரை சொல்லாமல்தான் பேசிக் கொண்டிருப்பாரா?”
``என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்றையே சொல்கிறனே. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜனும் ஹெச்.ராஜாவும் எங்களின் தலைவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்த போது அவர்களை கண்டித்து ஒரு அறிக்கையை தயார் செய்தேன். அதில் மரியாதைக்குரிய என்கிற வார்த்தையை சேர்க்கவில்லை. தலைமை அதை நோட் செய்தது. வழக்கமாக மரியாதைக்குரிய அரசியல் தலைவர் ஹெச்.ராஜா என்றுதானே சொல்வீர்கள் என்றனர். இல்லை, இது என்னுடைய கோபம், ஆதங்கம் அதனால் சேர்க்கவில்லை என்றேன். அப்படியெல்லாம் வேண்டாம், மரியாதைக்குரிய ஹெச்.ராஜா என்றே குறிப்பிடுங்கள் என தலைமை உத்தரவிட்டது. இதுதான் எங்களின் அரசியல் நாகரிகம்.
அதே நேரம் உங்களின் விமர்சனம் புரிகிறது. பெயர் சொல்லி விமர்சிக்க வருங்காலத்தில் ஆக்ரோஷமான மேடைகள் அமையும். எங்களிடம் இளம்படை இருக்கிறது. அவர்களை நிதானமாக பண்போடு வழிநடத்த வேண்டிய கடமை இருக்கிறது. அதற்காகத்தான் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தலைவர் பேசுகிறார்.”

``ஆண்டு விழாவில் மும்மொழிக் கொள்கை விவகாரத்தை நக்கலாக பேசியிருக்கிறாரே. பிரச்னையின் தீவிரத்தன்மையை உணர்ந்து பேசியதாக தெரியவில்லையே. அந்த பேச்சு சமூகவலைதளங்களிலும் பெருத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறதே?”
``மும்மொழிக் கொள்கை என்பது பெரிய பிரச்னைதான். அதன் தீவிரத்தன்மை தலைவருக்கும் தெரியும். அதனால்தான் சில நாட்களுக்கு முன்பு மும்மொழிக் கொள்கை மாநில சுயாட்சியை பறிக்கும் செயல் என தெளிவாக அறிக்கைவிட்டார். இங்கே தலைவர் மும்மொழிக் கொள்கை விவகாரத்தை நக்கலடிக்கவில்லை. மக்களுக்காக பேசி சட்டம் இயற்ற வேண்டிய அரசுகள் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருப்பதைத்தான் நக்கலடிக்கிறார். எங்களின் கையில் அதிகாரமில்லை. நாங்கள் ஹேஷ்டேக் போடலாம். அது எங்களுக்கு ஒரு ஆயுதம். அதிகாரத்தில் இருக்கும் அவர்களும் #GetOutModi #GetOutStalin என ஹேஷ்டேக் போடுவதைத்தான் தலைவர் நக்கலடிக்கிறார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். அது மாநில சுயாட்சிக்கு எதிரானது.
``அதிகாரத்தில் இருப்பவர்கள் ஹேஷ்டேக் போடுவதை விமர்சிக்கிறீர்கள். அதேநேரத்தில், இங்கே ஒரு அரசியல் கட்சியால் ஜனநாயகரீதியாக மக்களுக்காக போராட முடியுமே. கட்சி தொடங்கிய ஓராண்டில் நீங்கள் அப்படி என்ன போராட்டத்தை செய்தீர்கள். அதிகபட்சமாக அறிக்கைதானே வெளியிடுகிறீர்கள்?”
``அரசியலில் நாங்கள் இன்னமும் தீவிரமான போராட்டங்களை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் நாங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். கோயம்புத்தூரில் குப்பை மேலாண்மை செய்யாமல் குப்பைக்கூடாரமாக ஒரு இடத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதற்காக எங்களின் தோழர்கள் போராடியிருக்கிறார்கள். தேனியில் வஞ்சிக்கப்படும் விவசாயிகளுக்காக அவர்களுடன் இணைந்து போராடியிருக்கிறார்கள். அண்ணா யூனிவர்சிட்டி விவகாரத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கிய எங்களின் தொண்டர்களை கைது செய்தார்கள். நாங்கள் தலைமையின் வழிகாட்டுதலின்படி போராடிக் கொண்டுதான் இனி வரும் காலங்களில் இன்னும் அதிக போராட்டங்களை முன்னெடுப்போம்.”

``எல்லா கட்சியுமே எதோ ஒரு பிரச்னையை மையமாக பேசி அதற்காக போராடி அதன் வழியேதான் தன்னுடைய அரசியலை வளர்த்தெடுக்கும். திமுகவின் மாநில சுயாட்சி போராட்டங்கள், மதிமுக, நாதக போன்ற கட்சிகளின் இலங்கை தமிழர் பிரச்னை போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். அப்படி தவெக எந்த பிரச்னையை மையமாக கையில் எடுத்திருக்கிறது. எதை வைத்து வளரப்போகிறது?”
``எல்லாருக்கும் சமநீதி என்பதுதான் எங்களின் கொள்கை. அதற்கெதிராக இருக்கும் அத்தனைக்கும் எதிராகவும் நாங்கள் போராடுவோம். மும்மொழிக் கொள்கையில் மாநிலங்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது. அதற்காக போராடுகிறோம். அண்ணா யூனிவர்சிட்டி விவகாரத்தில் பெண்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது. அதற்காக போராடியிருக்கிறோம். அண்ணா நகரில் இரட்டைக் கொலை செய்த ஒரு ரவுடி அதை ரீல்ஸாக போட்டுக் கொண்டிருக்கிறான். வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம்சாட்டி விட்டார்கள். இந்த ஆட்சியில் குற்றம் செய்பவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்கத்தான் அச்சமாக இருக்கிறது. இப்படியொரு நிலையில் நாங்கள் இன்னமும் அதிகமாக போராட வேண்டிய தேவை இருக்கிறது. கண்டிப்பாக போராடுவோம்.”
``பிரஷாந்த் கிஷோர் தவெக விழாவில் மேடையேறியிருக்கிறார். ஒரு தேர்தல் வியூக வகுப்பாளரை மேடையேற்றுவது, தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ட்ரெண்டாயிற்றே?”
``அவரை அரசியல் வியூக வகுப்பாளராக பார்க்க முடியாது. ஜன் சுராஜ் என்கிற கட்சியின் நிறுவனர் அவர். அரசியல் தளத்தில் அவருக்கென ஒரு மரியாதை இருக்கிறது. அவரை ஏன் மேடையேற்றினீர்கள் என கேட்கிறார்கள். எங்களால் அரசியல் தீண்டாமையை கடைபிடிக்க முடியாது. இதே பிகே தானே 2021 இல் திமுகவுக்கு பெரு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அவருக்கு வேண்டிய பண உதவிகளையெல்லாம் திமுக செய்துகொடுத்ததே. அதையெல்லாம் கேள்வி எழுப்பவில்லையே. அவர் அரசியல் தளத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார். அதனடிப்படையில்தான் அவர் எங்களின் மேடையில் ஏற்றப்பட்டார்.”

``குஜராத் மாடல்தான் சிறந்த மாடல் என இந்தியாவின் மீது ஒரு கருத்து திணிக்கப்படுகிறது என பிரஷாந்த் கிஷோர் தவெக மேடையில் பேசியிருக்கிறார். ஆனால், அந்த குஜராத் மாடலை விளம்பரப்படுத்தி திணித்ததே இதே பிகேதானே?”
``குஜராத் மாடல் மட்டுமா, திராவிட மாடலும் அவர் உருவாக்கியதுதானே. ஆனால் எங்களுக்கு மாடல்களின் மீது நம்பிக்கையில்லை.”
``அரசியல்ரீதியாக அவர் எந்தப்பக்கம் நிற்கிறார் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் மாறிக்கொண்டே இருக்கிறதே. அப்படிப்பட்டவரை நம்பி அரசியல் செய்யப்போகிறீர்களா?”
``மாற்றம் ஒன்றே மாறாது. நான்காண்டுகளுக்கு முன்பு திமுகவுக்கு பிகேவின் தேவை ஏற்பட்டதே. நாங்கள் வியூக வகுப்பாளர்களை மட்டுமே நம்பவில்லை. அவர்களால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என நம்பவில்லை. அறிவார்ந்த மக்கள் நம்முடன் இருப்பது பலம். பிரஷாந்த் கிஷோருக்கு இந்தத் துறையில் அனுபவம் இருக்கிறது. அவர் எங்களுடன் நட்பின் அடிப்படையில் மரியாதையோடு நிற்கிறார். அவ்வளவுதான்.”

``'What bro...wrong bro...' என விஜய் பேசும் பாணியை ஆடியோ விழாவில் பேசுவதை போன்று இருக்கிறதென ஒரு தரப்பு விமர்சிக்கிறதே.”
``பாமர மக்களுக்கும் தன்னுடைய பேச்சு சென்று சேர வேண்டும் என்ற வகையில் தலைவர் எடுத்திருக்கும் யுக்தி இது. இரத்தத்தின் இரத்தமே, என் உயிரினும் மேலான உடன்பிறப்பே போல இதுவும் ஒரு யுக்தி. இந்த கால Bro தலைமுறைக்கு இந்த ஸ்டைலில்தான் நல்ல விஷயங்களை சொல்ல முடியும்.”
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
